/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
56வது வார்டுக்கு விரைவில் வருகிறது இடைத்தேர்தல்
/
56வது வார்டுக்கு விரைவில் வருகிறது இடைத்தேர்தல்
ADDED : ஜன 28, 2025 08:02 AM
கோவை : கோவை மாநகராட்சியில் காலியாக உள்ள, 56வது வார்டுக்கு விரைவில் இடைத்தேர்தல் வர இருக்கிறது. அதற்காக, புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்க, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், 56வது வார்டு கவுன்சிலர் (காங்.,) கிருஷ்ணமூர்த்தி, 62, கடந்தாண்டு நவ., 27ல் உயிரிழந்தார். அதனால், 56வது வார்டு கவுன்சிலர் பதவி காலியாக இருக்கிறது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு, இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது; அதற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. அதனால், ஈரோடு கிழக்கு தேர்தல் முடிந்த பின், உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு, இடைத்தேர்தல் நடத்த ஆலோசிக்கப்பட்டு இருக்கிறது. இச்சூழலில், 56வது வார்டுக்கான புது வாக்காளர் பட்டியலை தயாரிக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
தேர்தல் பிரிவினர் கூறுகையில், 'முதல்கட்டமாக, வாக்காளர் பட்டியல் தயாரிக்க உள்ளோம். கடந்த 5ம் தேதி வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலை, மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து பெற்று, 56வது வார்டுக்கு உட்பட்ட வீதிகளில், எத்தனை வாக்காளர்கள் வசிக்கின்றனர் என பிரித்து, புது பட்டியல் தயாரிக்க உள்ளோம். இதற்கான பணி துவக்கப்பட்டுள்ளது' என்றனர்.

