தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி கொடுக்க வலியுறுத்தல்
தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி கொடுக்க வலியுறுத்தல்
UPDATED : அக் 22, 2026 06:41 PM
ADDED : அக் 22, 2026 06:36 PM

பொள்ளாச்சி: ‘தீபாவளி பண்டிகை நெருங்கும் சூழலில், இன்னும் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்படாமல் உள்ளது,’ என, பொள்ளாச்சி பட்டாசு வணிகர் நலச்சங்க தலைவர் தெரிவித்தார்.
பொள்ளாச்சி பட்டாசு வணிகர் நலச்சங்க தலைவர் செல்வகுமார் தலைமையில், நிர்வாகிகள் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர்.
நலச்சங்க தலைவர் கூறியதாவது:
பொள்ளாச்சி தாலுகாவில் ஆண்டுதோறும், ஒரு மாதத்துக்கு முன் ஆய்வு செய்து அனுமதி வழங்கப்படும். ஆனால், இந்தாண்டு தற்காலிக பட்டாசு உரிமம் தர உள்ள கடைகளில் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்படாமல் உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும், 15 நாட்கள் உள்ளன. ஏற்கனவே, ‘ஆன்லைன்’ வியாபாரத்தினால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது அனுமதி கிடைத்து கடை போடும் நாட்களும் குறைந்தால் பாதிப்பு ஏற்படும்.
கோவை மாவட்டத்தில், 900 தற்காலிக பட்டாசு கடைகளும், பொள்ளாச்சியில், 100க்கும் மேற்பட்ட கடைகளும் அனுமதிக்காக காத்திருக்கிறது. அனுமதி கிடைக்க தாமதம் ஏற்பட்டால், ஒவ்வொருவருக்கும், 50 ஆயிரம் ரூபாய் முதல், ஒரு லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும். எனவே, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
