/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விளை பொருட்கள் இருப்பு வைக்க அழைப்பு
/
விளை பொருட்கள் இருப்பு வைக்க அழைப்பு
ADDED : ஜூலை 06, 2025 11:35 PM

மேட்டுப்பாளையம்; காரமடையில் ஆயிரம் மெட்ரிக் டன் சேமிப்பு கிடங்கு, புதிதாக திறக்கப்பட்டுள்ளதால், விவசாய விளை பொருட்களை, இருப்பு வைத்து விற்பனை செய்ய முன்வர வேண்டும் என, வேளாண்மை துணை இயக்குனர் மீனாம்பிகை விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
காரமடையில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இரண்டு கோடி ரூபாய் மதிப்பில், புதிதாக ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட, சேமிப்புக் கிடங்கு கட்டப்பட்டு உள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக, சேமிப்பு கிடங்கை திறந்து வைத்தார். காரமடை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில், கண்காணிப்பாளர் யுவராஜ் வரவேற்றார். காரமடை நகராட்சி தலைவர் உஷா மற்றும் கவுன்சிலர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த வேளாண் துணை இயக்குனர் மீனாம்பிகை பேசுகையில், ''காரமடை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிடங்கு உள்ளது. இதில் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை இருப்பு வைக்கலாம். 2000 சதுர அடியில் இரண்டு உலர் களங்கள் உள்ளன.
இதில் விளை பொருட்களை காய வைத்து, சுத்தம் செய்து, தரம் பிரிக்கலாம். ஏற்கனவே, 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சிறிய கிடங்கு ஒன்று உள்ளது. தற்போது ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு புதிதாக கட்டப்பட்டுள்ளது.
எனவே விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை கிடங்குகளில் இருப்பு வைத்து, விலை கிடைக்கும் பொழுது, விற்பனை செய்ய இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்,'' என்றார்.