/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
நீச்சல் குளம் அமைக்கலாமா? தரை தளம் பாதிப்பை தவிர்க்க பொறியாளர் ஆலோசனை
/
நீச்சல் குளம் அமைக்கலாமா? தரை தளம் பாதிப்பை தவிர்க்க பொறியாளர் ஆலோசனை
நீச்சல் குளம் அமைக்கலாமா? தரை தளம் பாதிப்பை தவிர்க்க பொறியாளர் ஆலோசனை
நீச்சல் குளம் அமைக்கலாமா? தரை தளம் பாதிப்பை தவிர்க்க பொறியாளர் ஆலோசனை
ADDED : அக் 10, 2025 10:46 PM

நாங்கள் வீடு கட்டி ஒரு வருடம் ஆகிறது. தற்போது வரை எங்களது வீட்டின் தரைத்தளத்தில் சுவற்றில் கீழே ஒரு அடிக்கு ஈரமாக ஓதம் அடித்துக்கொண்டே இருக்கிறது. இதற்கு என்ன காரணம்; எப்படி சரி செய்வது?
-துரைசாமி, பீளமேடு.
இதை 'ரைசிங் டேம்னஸ்' என்று கூறுவார்கள். தாங்கள் வீடு கட்டும் போது அஸ்திவாரத்திற்குள் மண்ணை நிரப்பி, அதில் நீரை ஊற்றி சமன்படுத்தி, அந்த நீரின் ஈரம் முற்றிலுமாக காய்வதற்கு முன், உடனடியாக அதன் மீது புளோரிங் கான்கிரீட் போட்டு இருப்பீர்கள். அதன் ஈரப்பதம் சில இடங்களில் இதுபோன்று தான் வெளியே வரும்.
இதை சரிப்படுத்த, தற்போது கிடைக்கும் டேம் புரூப் பெயின்டை வாங்கி அந்த இடத்தில் அடித்தால் சரியாக வாய்ப்பு உள்ளது. அப்படியும் சரியாகவில்லை எனில், அந்த இடத்தில் உள்ள ஈரமான பூச்சு கலவையை முற்றிலுமாக உடைத்து நீக்கிவிட்டு, அதில் உள்ள செங்கல் சுவற்றின் மீது தற்போது இதற்கென புதிதாக வந்துள்ள, வாட்டர் புரூப்பிங் அமிலத்தை அடித்து, அதன்மீது மீண்டும் பூச்சு கலவையை பூசி விட்டால், நிரந்தரமாக சரியாகிவிடும்.
எங்கள் வீடு கட்டி, 10 ஆண்டுகள் ஆகிறது. வீட்டின் மொட்டை மாடியில் ஒரு நீச்சல் குளம் அமைக்க எண்ணுகிறோம். இதற்கு என்ன செய்ய வேண்டும்?
-சூர்யா, ஆர்.எஸ்.புரம்.
மொட்டை மாடியில் நீச்சல் குளம் அமைக்கும் முன். அந்த நீச்சல் குளத்தில் எத்தனை லிட்டர் தண்ணீரை நிரப்ப போகிறோம், அதன் நீள, அகலம் ஆகியவற்றை கணக்கிட்டு, அதற்கு ஏற்ப மொட்டை மாடியில் தரை தளத்தை ஏற்படுத்த வேண்டும். ஏற்கனவே கட்டிய வீடு என்பதால் அதில் நீச்சல் குளம் அமைப்பதற்கு முன், தகுந்த பொறியாளரை கொண்டு ஆலோசனை செய்துவிட்டு அமைக்கவும்.
நாங்கள் புதிதாக கட்டிக் கொண்டிருக்கும் வீட்டின் அருகில் நல்ல தண்ணீருக்காக தொட்டி கட்ட குழி தோண்டும்போது, பக்கத்து வீட்டின் தென்னை மர வேர்கள் நிறைய வருகின்றன. அதை வெட்டி விட்டு அப்படியே செங்கல் வைத்து, தொட்டி கட்டி பூசலாமா இல்லை ஏதேனும் பிரச்னை வருமா; விளக்கமாக கூறவும்?
-கிருஷ்ணவேணி, பொள்ளாச்சி.
தென்னை மர வேர்கள் கிடைமட்டமாக ஊடுருவும் தன்மை கொண்டது. செங்கல் கட்டடத்திற்குள் மிகச்சுலபமாக உள்ளே நுழைந்து, கட்டடத்தில் விரிசலை ஏற்படுத்தி விடும். எனவே, இதுபோன்ற இடங்களில் தண்ணீர் தொட்டி கட்டும்போது செங்கல் கட்டடத்திற்கு பதிலாக கம்பி கட்டி, கான்கிரீட் போட்டு பூசி 'வாட்டர் புரூபிங்' செய்து பயன்படுத்துவதே சிறந்தது.
நாங்கள் புதிதாக இடம் வாங்கியுள்ள 'லே-அவுட்', மெயின் ரோட்டில் இருந்து சற்று தாழ்வாக உள்ளது. தற்போது நாங்கள் அதில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளோம். அதில், பேஸ்மென்ட் உயரம் எவ்வளவு வைத்தால் சரியாக இருக்கும்?
-பிரேமா, கிணத்துக்கடவு.
தங்களது மனை இடம் மெயின் ரோட்டில் இருந்து தாழ்வாக இருப்பின், பேஸ்மென்ட் உயரத்தை மெயின் ரோட்டின் மட்டத்திற்கு மேலே, குறைந்தது மூன்று அடி வருமாறு திட்டமிடுவது நல்லது. அப்போதுதான் வரும் காலங்களில் தங்களது லே-அவுட் ரோட்டின் உயரம் அதிகரிக்கும்போதும், தங்களது வீட்டின் கழிவு நீரை மெயின் ரோட்டிற்கு கொண்டு செல்ல முடியும்.
மொட்டை மாடியில் ஓடுகள் பதிக்கலாமா? அல்லது சிமென்ட் கலவையில் தளம் அமைக்கலாமா. இவற்றில் எது சிறந்தது?
-நடராஜன், வீரபாண்டி.
மொட்டை மாடியின் கீழே உள்ள அறைகள், சற்று வெப்பம் குறைவாக இருக்க வேண்டும் என விரும்பினால், மொட்டை மாடியில் தரமான ஓடுகள் ஒட்டிக்கொள்ளலாம். தற்போது தரமான ஓடுகள் கிடைப்பது சிரமமாக உள்ளது. எனவே, கூலிங் டைல்ஸ் ஒட்டிக் கொள்ளலாம். செலவு குறைவாக இருக்க வேண் டும் என எண்ணினால், சிமென்ட் தளம் அமைத்து அதற்கு மேலே 'கூல் கோட் பெயின்ட்' அடித்துக் கொள்ளலாம்.
நாங்கள் புதிதாக வீடு கட்ட அஸ்திவார குழி எடுத்த இடத்தில், 8 அடி ஆழம் வரை தோண்டியும் மண்ணில் கெட்டித்தன்மை வரவில்லை. இதற்கு எந்த வகையான அஸ்திவாரம் அமைப்பது?
-மோகன்ராஜ், சரவணம்பட்டி.
தங்களது இடத்தில் மண் பரிசோதனை செய்து, அந்த மண்ணின் சரியான தாங்கு திறனை அறிந்து, சிறந்த பொறியாளரின் மூலமாக அஸ்திவாரத்தை வடிவமைக்க வேண்டும்.
-ரமேஷ் குமார்
முன்னாள் தலைவர்,
கோவை மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கம்.