/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மத்திய அரசு ரூ.250 கோடி ஒதுக்கீடு; 'பொள்ளாச்சி கிளஸ்டர்' அமைக்க கருத்து கேட்பு
/
மத்திய அரசு ரூ.250 கோடி ஒதுக்கீடு; 'பொள்ளாச்சி கிளஸ்டர்' அமைக்க கருத்து கேட்பு
மத்திய அரசு ரூ.250 கோடி ஒதுக்கீடு; 'பொள்ளாச்சி கிளஸ்டர்' அமைக்க கருத்து கேட்பு
மத்திய அரசு ரூ.250 கோடி ஒதுக்கீடு; 'பொள்ளாச்சி கிளஸ்டர்' அமைக்க கருத்து கேட்பு
ADDED : ஜூலை 08, 2025 09:53 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், தென்னை விவசாயிகளை ஒருங்கிணைத்து, 'கிளஸ்டர்' அமைக்க மத்திய அரசு, 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டம் குறித்து கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், தென்னையில்வேர்வாடல் நோய், வெள்ளை ஈ தாக்குதல் போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளது.தென்னை விவசாயத்தை பாதுகாக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தியதால், மத்திய வேளாண்துறை செயலர் கடந்தாண்டு பொள்ளாச்சியில் நேரடி ஆய்வு செய்தார்.
அதன் தொடர்ச்சியாக, தற்போது பொள்ளாச்சி பகுதியில், மத்திய அரசின் தேசிய தோட்டக்கலைத்துறை சார்பில், 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 'பொள்ளாச்சி கிளஸ்டர்' அமைக்க உத்தரவிட்டுள்ளது.
இத்திட்டம் குறித்து உற்பத்தியாளர்கள் நிறுவனங்களின் தலைவர்கள், இயக்குனர்கள், உறுப்பினர்களுடன் கருத்துகேட்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி, பொள்ளாச்சி சக்தி கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சித்தார்த்தன் தலைமை வகித்தார். கோவை மாவட்ட வேளாண் உற்பத்திக்குழு உறுப்பினர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர்கள் வசுமதி, சவுமியா, கோபிநாத்,உற்பத்தியாளர் நிறுவனங்களின் நிர்வாகிகள்சக்திவேல், அறிவொளி முத்துசாமி, பத்மநாபன், தனபால் உள்ளிட்ட பலர் பேசினர்.
கூட்டம் நடைபெறுவதற்கான தகவல்களை முன்கூட்டியே தெரிவித்து இருந்தால் பயனாக இருக்கும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
கோவை மாவட்ட வேளாண்மை உற்பத்திக்குழு உறுப்பினர் கூறியதாவது:
மத்திய அரசு தேசிய தோட்டக்கலைத்துறை, 250 கோடி ரூபாய் நிதிஒதுக்கப்பட்டு, பொள்ளாச்சி தெற்கு, வடக்கு, ஆனைமலை மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளில் உள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து, 'பொள்ளாச்சி கிளஸ்டர்' அமைக்க உத்தரவிட்டுள்ளது.
அதில், உற்பத்தி திறன் மேம்படுத்துதல், விளைபொருட்களை மதிப்புக்கூட்டுதல், மதிப்புக்கூட்டிய பொருட்களை சந்தைப்படுத்துதல் என மூன்று பிரிவுகளாக உள்ளன. இதனால், விவசாயிகள் பயன்பெற முடியும். மேலும், தென்னை உற்பத்தியை அதிகரிக்கும் திட்டமும் உள்ளது.
தற்போது, செயல்படுத்த வேண்டிய திட்டங்கள், மாற்றங்கள், தேவைகள் குறித்து கருத்து கேட்கும் வகையில், கூட்டம் நடத்தப்பட்டது. அதில், தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள், தேசிய தோட்டக்கலைத்துறையினருக்கு தெரிவிக்கப்படும்.திட்டத்தை முழுமையாக செயல்படுத்த ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இவ்வாறு, கூறினார்.