/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஏழு எருமை பள்ளத்தில் ரூ.45 லட்சத்தில் தடுப்பணை
/
ஏழு எருமை பள்ளத்தில் ரூ.45 லட்சத்தில் தடுப்பணை
ADDED : ஜூலை 06, 2025 11:33 PM

மேட்டுப்பாளையம்; பெள்ளாதி குளம் நிரம்பி வெளியேறும் தண்ணீர், வீணாக பவானி ஆற்றில் கலப்பதை சேமித்து வைக்க, ஏழு எருமை பள்ளத்தில், 45 லட்சம் ரூபாய் செலவில் தடுப்பணை கட்டப்படுகிறது.
நிலத்தடி நீர் செரிவூட்ட, குளம், குட்டைகளுக்கு தண்ணீர் நிரப்ப, தமிழக அரசு அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை, நடைமுறை படுத்தி உள்ளது.
ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மூன்று மாவட்டங்களில், 1045 குளம், குட்டைகளுக்கு, குழாய்கள் வாயிலாக தண்ணீர் நிரப்பும் வகையில், இத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் இருந்து, மின்மோட்டார் வாயிலாக குளம், குட்டைகளுக்கு, தண்ணீர் பம்பிங் செய்யப்பட உள்ளது.
காரமடை ஒன்றியத்தில், 100 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள, பெள்ளாதி குளம், இத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளது. கடந்த மாதம் பெய்த மழையால் பெள்ளாதி குளம் நிரம்பியது. இந்த நிலையில் அத்திக்கடவு திட்ட தண்ணீர், இக்குளத்திற்கு வரும் பொழுது, தொடர்ந்து, குளம் நிறைந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இந்த தண்ணீர் ஏழு எருமை பள்ளம் வழியாக, பவானி ஆற்றுக்கு, வீணாக செல்கிறது. பெள்ளாதி குளத்தில் இருந்து, இரண்டு கிலோமீட்டர் தொலைவில், மொங்கம்பாளையத்தில் மூங்கில் குட்டை உள்ளது. பெள்ளாதி குளத்தில் இருந்து, வீணாக வெளியேறும் தண்ணீரை, மூங்கில் குட்டை கொண்டு செல்ல, ஏழு எருமை பள்ளத்தில் தடுப்பணை கட்ட, பொது மக்கள், விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதை அடுத்து அரசு தடுப்பணை கட்ட, 45.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. தற்போது ஏழு எருமை பள்ளத்தில், 140 அடி நீளத்திலும், 40 அடி அகலம், 5 அடி உயரத்தில் தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெறுகின்றன. தடுப்பணை கட்டி முடிக்கும் போது, அதில் தேங்கி நிற்கும் தண்ணீரால், ஒரு கிலோ மீட்டர் சுற்றுப்பகுதியில் உள்ள கிணறுகளுக்கு நீர் ஊற்று கிடைக்கும் என, விவசாயிகள் தெரிவித்தனர்.