/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தண்ணீர் வராத தடுப்பணை: தலைமை பொறியாளர் ஆய்வு
/
தண்ணீர் வராத தடுப்பணை: தலைமை பொறியாளர் ஆய்வு
ADDED : அக் 30, 2025 12:01 AM

கருமத்தம்பட்டி: தண்ணீர் வராத கவுசிகா நதி தடுப்பணைகளில், அத்திக்கடவு - அவிநாசி திட்ட தலைமை செயற்பொறியாளர் ஆய்வு செய்தார்.
அத்திக்கடவு -- அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்தின் கடைமடை பகுதியான கிட்டாம்பாளையம் ஊராட்சி, மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் உள்ள கவுசிகா நதி தடுப்பணைகளுக்கு தண்ணீர் வருவதில்லை என்ற புகார் பல்வேறு தரப்பினரிடம் இருந்து எழுந்துள்ளது. சில நாட்களுக்கு முன், குளத்துப்பாளையம் தடுப்பணையை பார்வையிட்ட பா.ம.க., தலைவர் அன்புமணியும் இதே புகாரை கூறியிருந்தார்.
இந்நிலையில், திட்டத்தின் தலைமை பொறியாளர் தலைமையிலான குழுவினர் கிட்டாம் பாளையம், குளத்துப் பாளையம், வாகராயம்பாளையம் பகுதியில் ஆய்வு செய்தனர். கவுசிகா நதி நீர் கரங்கள் அமைப்பு நிர்வாகி செல்வராஜ், சமூக ஆர்வலர் வெற்றிவேல், மோப்பிரிபாளையம் பேரூராட்சி தலைவர் சசிக்குமார், கிட்டாம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் சந்திரசேகர் உள்ளிட்டோர் அதிகாரிகளிடம் தண்ணீர் வராததற்கான காரணங்களை கேட்டனர். தண்ணீர் வர தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,, எனவும், வலியுறுத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

