/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் 'சொதப்பல்'; வீரர்களின் திறமைக்கு தடை; குறைகளை களைய எதிர்பார்ப்பு
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் 'சொதப்பல்'; வீரர்களின் திறமைக்கு தடை; குறைகளை களைய எதிர்பார்ப்பு
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் 'சொதப்பல்'; வீரர்களின் திறமைக்கு தடை; குறைகளை களைய எதிர்பார்ப்பு
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் 'சொதப்பல்'; வீரர்களின் திறமைக்கு தடை; குறைகளை களைய எதிர்பார்ப்பு
ADDED : செப் 25, 2024 12:05 AM
கோவை : 'முதல்வர் கோப்பை' விளையாட்டு போட்டிகளில், அடிப்படை வசதிகளின்றி அவதியுற்றதாக வீரர்கள் புலம்பிய நிலையில், சங்கங்களின் 'அரசியல்' விளையாட்டும் திறமைக்கு முட்டுக்கட்டையாக அமைந்ததாக, விளையாட்டு வீரர்கள் பலர் குமுறுகின்றனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட அளவிலான 'முதல்வர் கோப்பை' விளையாட்டு போட்டிகள் கடந்த, 10ம் தேதி துவங்கியது. தடகளம், வாலிபால், கூடைப்பந்து, கபடி என, பல்வேறு போட்டிகள் நேரு ஸ்டேடியம், பாரதியார் பல்கலை, தனியார் கல்லுாரி மைதானங்களில் நடந்தது.
கல்லுாரி மாணவர்கள், 16 ஆயிரத்து, 809 பேர், பள்ளி மாணவர்கள், 18 ஆயிரத்து, 679 பேர், அரசு ஊழியர்கள், 1,449 பேர், பொதுப்பிரிவில், 2,167 பேர், மாற்றுத்திறனாளிகள், 657 பேர் என, 39 ஆயிரத்து, 738 பேர் இணையதளத்தில் பதிவு செய்தனர்.
சங்கத்தினரே சில போட்டிகளுக்கு, 'கமிட்டி'யாக இருந்து முடிவு எடுத்தனர். கிரிக்கெட் அணிகள் எண்ணிக்கையை காரணம் காட்டி, 10 ஓவர் என்பது பாதியாக குறைக்கப்பட்டது. அதேபோல், கால் பந்து உள்ளிட்ட போட்டிகளில், விளையாட்டின் நேரமும் குறைக்கப்பட்டது.
இப்படி பெயரளவுக்கு போட்டிகளை நடத்துவதாக, ஏற்கனவே வீரர்கள் மத்தியில் அதிருப்தி இருந்தது.
தவிர, சங்கத்தினர் சிலர் தங்களிடம் பயிற்சிக்கு வரும் வீரர்களை முன்னிலைப்படுத்தி வெற்றி நோக்குடன் வழிநடத்தியதாகவும், குமுறல்கள் எழுந்துள்ளன.
திறமைக்கு முட்டுக்கட்டை !
உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள் சிலர் கூறியதாவது:
திறமையை வெளிப்படுத்தி அடுத்த நிலைக்கு, வீரர்களை கொண்டு செல்லவே இப்போட்டி நடத்தப்படுகிறது. இதில், அடிப்படை வசதிகள் குறையுடன், சங்கங்களின் 'அரசியல்' பின்னணியும் மாணவர்களின் முழு திறமைக்கு, முட்டுக்கட்டையாக அமைகிறது.
ஒரு கல்லுாரியில் நடந்த போட்டியில், குறிப்பிட்ட வயது வரம்பையும் தாண்டி விளையாடியுள்ளனர்.
'கமிட்டி'யினர் சரியாக சோதனை செய்து வீரர்களை அனுமதித்திருந்தால், குறிப்பிட்ட வயதுடைய திறமையான அணியினர், வெளியேற வேண்டிய அவலமே இருந்திருக்காது. இனியாவது, இது போன்ற போட்டிகளை, பெயரளவுக்கு நடத்தாமல், நன்கு திட்டமிட்டு நடத்த வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.