/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புகையிலைக்கு அடிமையாகும் சிறார்கள்; ஆரோக்கியமான இளைய சமுதாயம் தேவை
/
புகையிலைக்கு அடிமையாகும் சிறார்கள்; ஆரோக்கியமான இளைய சமுதாயம் தேவை
புகையிலைக்கு அடிமையாகும் சிறார்கள்; ஆரோக்கியமான இளைய சமுதாயம் தேவை
புகையிலைக்கு அடிமையாகும் சிறார்கள்; ஆரோக்கியமான இளைய சமுதாயம் தேவை
ADDED : மே 23, 2025 01:09 AM
சூலுார்: பல்வேறு வகையான புகையிலை பொருட்களை சிறார்கள் பயன்படுத்துவதால், பல வகையான புற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக, டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
போதை பொருட்களுக்கு அடிமையாவது உடல்ரீதியிலான மற்றும் பல்வேறு சமூக பிரச்னைகளுக்கும் காரணமாக அமைகிறது. இளம் சிறார்களை ஈர்க்கும் விதத்தில் விதவிதமான புகையிலை பொருட்கள் சந்தையில் விற்கப்படுகின்றன. தடை இருந்தாலும், கள்ளச் சந்தையில் விற்பனை ஜோராக நடக்கிறது.
பள்ளி வளாகத்திலேயே புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கண்காணிப்பு தேவை
ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
புகையிலை பொருட்களை பயன்படுத்தும் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தடுமாறுகின்றனர். சமூகத்தை சீரழிக்கும் செயல்களிலும் ஈடுபடுவது கண்கூடாக அதிகரித்து வருகிறது.
பள்ளிக்குள் நாங்கள் எவ்வளவு கண்டித்தாலும் எந்த பலனும் இல்லாத நிலை உள்ளது. தற்போது விடுமுறை விடப்பட்டுள்ளது. வெளி நபர்களுடன் அதிகம் பழகும் வாய்ப்பு உள்ளது.
அதனால், மேலும் தவறான வழிக்கு செல்லும் நிலை உருவாகலாம். பெற்றோர் தங்கள் குழந்தைகளின் மீதான கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும்.
அவர்களை நல்வழிப்படுத்துவதில் முனைப்பு காட்ட வேண்டும். இல்லையென்றால் ஆரோக்கியமான இளைய சமுதாயம் உருவாவது கேள்விக்குறியாகி விடும்.
இவ்வாறு, ஆசிரியர்கள் கூறினர்.
கூட்டு முயற்சி
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், குழந்தைகள் பாதுகாப்பு துறை இணைந்து செயல்பட்டால் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.
விழிப்புணர்வு பிரசாரங்கள் வாயிலாகவும், போதையால் பாதிக்கப்பட்ட நபர்கள், நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படுவதை கண் முன் கொண்டு வந்து நிறுத்தினால் மட்டுமே சிறிதளவாவது மாற்றத்தை ஏற்படுத்த முடியும்'என்றனர்.
புற்றுநோய் வாய்ப்பு
டாக்டர்கள் கூறுகையில், 'புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால், வாய், தொண்டை, இரைப்பை உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அவற்றை தொடர்ந்து பயன்படுத்துவதால், நரம்பு சார்ந்த பிரச்னைகள் ஏற்படும். மூளை மந்தமடையும். பக்கவாதம் கூட ஏற்பட வாய்ப்பு உண்டு.
தீவிர போதை பழக்கத்துக்கு அடிமையாக உள்ளவர்களை மீட்க, உளவியல் ரீதியான சிகிச்சை அளிக்க வேண்டும். போதையின் பாதையில் செல்லும் சிறார்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்' என்றார்.