/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சியோடு கைகோர்க்கும் 'சிறுதுளி'யால் நல்ல தண்ணீர்! நீர்நிலை கழிவு நீரை சுத்திகரிக்கும் புதிய திட்டம்
/
மாநகராட்சியோடு கைகோர்க்கும் 'சிறுதுளி'யால் நல்ல தண்ணீர்! நீர்நிலை கழிவு நீரை சுத்திகரிக்கும் புதிய திட்டம்
மாநகராட்சியோடு கைகோர்க்கும் 'சிறுதுளி'யால் நல்ல தண்ணீர்! நீர்நிலை கழிவு நீரை சுத்திகரிக்கும் புதிய திட்டம்
மாநகராட்சியோடு கைகோர்க்கும் 'சிறுதுளி'யால் நல்ல தண்ணீர்! நீர்நிலை கழிவு நீரை சுத்திகரிக்கும் புதிய திட்டம்
ADDED : நவ 15, 2024 10:35 PM

கோவை; கோவை மாநகராட்சியோடு கைகோர்க்கும் 'சிறுதுளி' அமைப்பு, நீர் நிலைகளில் சேகரமாகும் கழிவு நீரை சுத்திகரித்து, மறுஉபயோகத்துக்கு பயன்படுத்தும் வகையில், 'நல்ல தண்ணீர்' என்கிற புதிய திட்டத்தை முன்னெடுக்கிறது.
கோவை மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளை மீட்டெடுப்பது மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது; மாணவ - மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, பசுமை கோவையை உருவாக்கும் முயற்சிகளில் 'சிறுதுளி' அமைப்பு ஈடுபட்டு வருகிறது. அடுத்த முயற்சியாக, 'நல்ல தண்ணீர்' என்ற புதிய திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
கோவையில் உள்ள குளங்கள் மற்றும் குட்டைகளில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரித்து நல்ல தண்ணீராக மாற்றி, குளங்களில் தேக்கினால், நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும். சுத்திகரிக்கப்படும் கழிவு நீரை தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான பணிகளுக்கு மறுஉபயோகத்துக்கு பயன்படுத்தினால், பயனுள்ளதாக இருக்கும் என்கிற முன்னெடுப்பு எடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில மாதங்களாக ஆய்வு செய்து, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, வெள்ளக்கிணறில் உள்ள தெற்குசோலை குட்டையில் துவக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.
'சிறுதுளி' நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் கூறியதாவது:
நீர் நிலைகளில் சாக்கடை தண்ணீர் தேங்கியிருக்கிறது. மழை நீரை நல்ல விதமாக சேமிக்கத் தவறி விட்டோம். மழை நீரும் கழிவு நீரும் கலந்து குளம், குட்டைகளில் தேங்கியுள்ளன. கழிவு நீரை சுத்திகரித்து மறுபயன்பாட்டுக்கு உபயோகிப்பது தொடர்பாக தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகிறோம். கழிவு நீரை சுத்திகரிப்பதன் மூலம் கிடைக்கும் நல்ல தண்ணீரை, ரோடு போடுதல், கட்டுமான பணி, தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தலாம். சென்னை மாநகராட்சியில் சுத்திகரித்த கழிவு நீரை விற்பனை செய்து வருகின்றனர்.
வெள்ளக்கிணறில் உள்ள குட்டையில் சாக்கடை தேங்கியிருக்கிறது; அத்தண்ணீரை ஆய்வுக்கு உட்படுத்தினோம். அதேபோல், சிங்காநல்லுாரில் உள்ள தொழிற்சாலை ஒன்று வழியாக செல்லும் வாய்க்கால் கழிவு நீரை மூன்று மாதமாக சோதனை செய்தோம். சுத்திகரித்த தண்ணீரை கட்டுமான பணிக்கு பயன்படுத்தலாம் என கூறியிருக்கின்றனர். சுத்திகரித்த நீரை யாரெல்லாம் பயன்படுத்த முடியும்; சந்தை வாய்ப்பு இருக்கிறதா என்பதை கேட்டறிகிறோம்.
கோவை மாநகராட்சியோடு இணைந்து செயல்பட உள்ளோம்; கிட்டத்தட்ட ரூ.5.5 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தண்ணீர் வழித்தடத்தை சீரமைத்து, சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பெருந்தொகை செலவாகும். சுத்திகரிக்கப்படும் நீர் முதலில் நீர் நிலைகளில் சேகரிக்கப்படும்; உபரியாகும் நீர் விற்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.