டிரைவரை தாக்கிய மர்ம நபர்கள்
சின்னவேடம்பட்டி, பாரதி வீதியை சேர்ந்தவர் மணிசங்கர், 33. லோடு ஆட்டோ டிரைவராக உள்ளார். இவர் சில தினங்களுக்கு முன், கோவை உடையம்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நான்கு பேர், ஆட்டோவை வழிமறித்தனர். மணிசங்கர் ஆட்டோவை நிறுத்தியதும், நான்கு பேரும் சரமாரியாக மணிசங்கரை தாக்கினர். இதில் கண், மூக்கு பகுதியில் பலத்த காயமடைந்த மணி சங்கர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மணிசங்கரின் மனைவி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் விசாரிக்கின்றனர்.
பஸ்சில் செயின் பறிப்பு
செல்வபுரம், காட்டேரி செட்டியார் வீதியை சேர்ந்தவர் ரேவதி, 29. இவர் பணிக்கு செல்வதற்காக, செட்டி வீதியில் பஸ்சில் ஏறினார். பின்னர், அவிநாசி சாலை ஸ்டேன்ஸ் பள்ளி நிறுத்தத்தில் இறங்கினார். பஸ்சில் இருந்து இறங்கி நடந்து சென்ற போது, கழுத்தில் இருந்த 1 சவரன் செயின் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
விபசாரம்; மூவர் கைது
வெரைட்டி ஹால் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் விபசாரம் நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது அங்கிருந்த ஒரு வீட்டில் மூவர் விபசாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
கோவையை சேர்ந்த தேபாசிஸ், 33, லட்சுமி, 41, கேரளாவை சேர்ந்த வசந்தா, 52 ஆகிய மூவரை கைது செய்து, அவர்களிடம் இருந்து போன், ரூ.1,800 பணம் பறிமுதல் செய்தனர்.