நகை, பணம் திருட்டு
ரத்தினபுரி, அம்பேத்கர் வீதியை சேர்ந்தவர் செல்லாத்தாள், 62; அதே பகுதியில் உள்ள அபார்ட்மென்ட்டில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, செல்லாத்தாள் வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். மறுநாள் காலை வேலையை முடித்து வீடு திரும்பிய போது, வீட்டின் முன் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த தங்க கம்மல் மற்றும் ரூ. 11 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதையடுத்து செல்லாத்தாள் ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார்.
வாலிபர் தற்கொலை
கோவை, சவுரிபாளையம், காந்தி நகரை சேர்ந்தவர் கோகுல்நாத், 30. இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. கடந்த சில நாட்களாக கோகுல்நாத் தனக்கு திருமணமாகாத ஏக்கத்தில் மது குடித்து கொண்டிருந்தார். இந்நிலையில், வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்ட விரோத மது விற்பனை
கோவையில், திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதனால், மாநகரில் பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக சிலர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டனர்.
இதை தடுக்கும் வகையில் மாநகர போலீசார் மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். ரத்தினபுரி போலீசார் சங்கனுார் ரோடு, காமாட்சி புரம் பகுதியில் ரோந்து சென்ற போது அங்கு ஒரு வீட்டில் மது விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று, பதுக்கி வைக்கப்பட்டிருந்த 549 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பதுக்கி வைத்திருந்த சிவகங்கையை சேர்ந்த சாம் குமார், 34 என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதேபோல், சாய்பாபாகாலனி, ராமநாதபுரம், செல்வபுரம், சிங்காநல்லுார், வடவள்ளி, கவுண்டம்பாளையம், பீளமேடு, சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் சுமார், 523 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலாளரை தாக்கிய மர்ம கும்பல்
கோவை, மணியகாரம்பாளையம், பாலாஜி லே அவுட் பகுதியை சேர்ந்தவர் பிரதீப், 39. சரவணம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் பிரதீப் தனது நண்பர் சம்பத் குமார் என்பவருடன் நின்று டீ குடித்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மூன்று நபர்கள் திடீரென பிரதீப்பிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் மூவரும் பிரதீப்பை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர். பிரதீப் குமார் சத்தம் போட்டதால் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.
மக்கள் வருவதை பார்த்த மூவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். காயமடைந்த பிரதீப் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து பிரதீப் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.