விபசாரத்தில் ஈடுபட்ட இருவர் கைது
செல்வபுரத்தை சேர்ந்தவர் லட்சுமணன், 46. இவர், பேரூர் தில்லை நகர் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், தன்னிடம் அழகான பெண்கள் இருப்பதாகவும், பணம் கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். லட்சுமணன் செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரை பிடித்து, விசாரணை நடத்தினர். அதில் அவர், செட்டி வீதியை சேர்ந்த ராகவேந்திரன், 29 என்பது தெரிந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராகவேந்திரன் மற்றும் அவருடன் இருந்த செல்வபுரத்தை சேர்ந்த 30 வயது பெண்ணையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
ஒன்பது டூவீலர்கள் திருட்டு
மாநகரில் பல்வேறு பகுதிகளில், நிறுத்தப்பட்டிருந்த ஒன்பது இரு சக்கர வாகனங்கள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கோவை, சாய்பாபா காலனி, கவுண்டம்பாளையம், பீளமேடு, ஆர்.எஸ்.புரம், காட்டூர், ரேஸ்கோர்ஸ், உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 13ம் தேதியில் இருந்து, 16ம் தேதி வரை ஒன்பது, இரு சக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இது தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து, சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.
92 வயது மூதாட்டி தீக்குளிப்பு
இடையர்பாளையம், காந்தி நகரை சேர்ந்தவர் தனம்மாள்,92. கணவர் இழந்த நிலையில், மகளுடன் வசித்து வந்தார். இவர், மூன்று வருடங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த அவர், ஆடையில் தீ வைத்துக் கொண்டார். வலி தாங்க முடியாமல் கதறிய தனம்மாளின் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து, அவரை மீட்டனர். கோவை அரசு மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி தனம்மாள் உயிரிழந்தார். போலீசார் வழக்குப்பதிவு விசாரிக்கின்றனர்.