கார் திருடிய வாலிபர்கள்
கேரள மாநிலம், திருச்சூரை சேர்ந்தவர் பைஜூ, 53. இவரது மகன், சென்னை செல்வதற்காக காரில் கோவை வந்தார். காரை, கோவை சுங்கம் பை பாஸ் சாலையில் சாவியுடன் நிறுத்தி விட்டு, சென்னை புறப்பட்டு சென்றார். தந்தை பைஜூவிற்கு போன் செய்து, காரை வீட்டுக்கு எடுத்து செல்லும்படி தெரிவித்துள்ளார். பைஜூ கோவை வந்து பார்த்த போது, அங்கு கார் இல்லை. பைஜூ ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அப்போது காரை திருடியது, போத்தனுாரை சேர்ந்த இஸ்ஷான் அகமது, 24 மற்றும் முகமது அரபாஸ், 21 என்பது தெரிந்தது. போலீசார் அவர்களை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
பைக் மோதி முதியவர் பலி
சீரநாயக்கன்பாளையம், திலகர் வீதியை சேர்ந்தவர் தங்கவேல், 65. இவர் மருதமலை ரோடு, பி.என்., புதுார் பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த பைக் ஒன்று, தங்கவேல் மீது மோதியது. கீழே விழுந்த முதியவருக்கு தலை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மெசேஜ் அனுப்பியவருக்கு அடி
உக்கடம், பாஸ்கர நாயுடு வீதியை சேர்ந்தவர் இப்ராகிம், 19. இவர் மரக்கடை பகுதியை சேர்ந்த முகமது மிசால், 22 என்பவரின் தங்கைக்கு, இன்ஸ்டாகிராமில் மெசேஜ் அனுப்பியுள்ளார். இது குறித்து மிசால் கேட்டபோது, இப்ராகிம், மிசால் இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவரும் மாறி, மாறி தாக்கிக்கொண்டனர். உக்கடம் போலீசார் இப்ராகிம் மற்றும் மிசால் ஆகியோர் மீது, வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தீ விபத்தில் பெண் பலி
கவுண்டம்பாளையம், சேரன் நகரை சேர்ந்தவர் விஜயா, 59. இவர் கடந்த மாதம் 26ம் தேதி மாலை, வீட்டில் விளக்கு ஏற்றினார். அப்போது, இவரின் சேலையில் தீப்பற்றியது. கோவை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த விஜயா, நேற்று முன்தினம் உயிரிழந்தார். கவுண்டம்பாளையம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.