ADDED : ஏப் 21, 2025 10:12 PM
வாடகை தகராறில் தாக்குதல்
கோவை சின்னதடாகம் குட்டைவெளியை சேர்ந்தவர் மனோஜ், 23; ஆட்டோ டிரைவர். ஆட்டோவை வீரபாண்டியை சேர்ந்த ராமு, 41 என்பவருக்கு வாடகைக்கு ஓட்ட கொடுத்திருந்தார். ஆனால், ராமு ஆட்டோவுக்கு வாடகை கொடுக்கவில்லை, இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் மனோஜ், தனது அண்ணன் ரஞ்சித்குமாருடன், வாடகை பணம் கேட்க வீரபாண்டியில் உள்ள ராமு வீட்டுக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராமு, தகாத வார்த்தைகளால் திட்டி ரஞ்சித்குமார், மனோஜை தாக்கி மிரட்டல் விடுத்தார். இதில், ரஞ்சித்குமார் காயமடைந்தார். மனோஜ் அளித்த புகாரின் பேரில் தடாகம் போலீசார் வழக்கு பதிந்து ஆட்டோ டிரைவர் ராமுவை கைது செய்தனர்.
வாலிபர் மீது தாக்குதல்
கோவை தெற்கு உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் பசுபதி, 19. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம், பசுபதியை சமாதானம் பேசலாம் என, சிலர் அழைத்தனர். பசுபதி புல்லுகாடு பகுதிக்கு சென்றார். அப்போது அங்கிருந்த சிறுவர்கள் உட்பட மூவர் பசுபதியை தாக்கினர். பின்னர் அவரை மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பினர். இதுகுறித்து பசுபதி கடைவீதி போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அதில் முன்விரோதத்தில் பசுபதியை தாக்கியது, புல்லுக்காடு தகரசெட் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன், 24 மற்றும் இரு சிறுவர்கள் எனத் தெரிந்தது. ராமசந்திரனை சிறையில் அடைத்த போலீசார், சிறுவர்களை சிறார் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர்.