ADDED : செப் 27, 2025 12:50 AM
'டிவி', ரொக்கம் திருட்டு
கோவைப்புதுார், ஈஸ்வர் நகரை சேர்ந்தவர் சாஜன். கடந்த, 21ல் குடும்பத்துடன் பெங்களூரு சென்றார். 24ல் வீட்டுக்கு அருகே வசிப்போர், இவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, திறந்திருப்பதாக கூறியுள்ளனர். சாஜன் வீட்டுக்குத் திரும்பி, உள்ளே சென்று பார்த்தபோது, 'டிவி', கார் சாவி, ரொக்கம் ஐந்தாயிரம் திருட்டு போயிருப்பது தெரிந்தது. குனியமுத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
ரயில் மோதி டிரைவர் பலி
தென்காசியை சேர்ந்தவர் ஆறுமுகசாமி, 35; கோவையில் தங்கி கால் டாக்ஸி டிரைவராக பணிபுரிந்தார். காரமடை அருகே பயணி ஒருவரை ஏற்றி விட்டு, தோலம்பாளையம் சாலையில் வந்தபோது, காரமடை ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. காரில் இருந்து இறங்கி இயற்கை உபாதை கழிக்க, தண்டவாளம் அருகே சென்றபோது, கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்த மெமு ரயில் மோதியது. கால்கள் துண்டிக்கப்பட்டு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேட்டுப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
போலீஸ்காரரை தாக்கியவர் கைது
செட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிபவர் சிவபிரகாஷ். ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள 'டாஸ்மாக்' மது பாரில் கல்லுாரி மாணவர்கள் பிரச்னை செய்வதாக தகவல் வந்தது. சிவபிரகாஷ் அங்கு சென்று மாணவர்களை வெளியே அழைத்து வந்தார். அவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். மாணவர்கள் கூட்டத்தில் இருந்த ஒருவர், கீழே கிடந்த பீர் பாட்டிலை எடுத்து சிவபிரகாஷ் கன்னத்தில் தாக்கினார். அவருக்கு காயமேற்பட்டது. போலீசார் மாணவர்களை கைது செய்தனர். விசாரணையில், துாத்துக்குடியை சேர்ந்த ஜோ என்பவர் போலீஸ்காரரை தாக்கியது தெரிந்தது. அவரையும் கைது செய்தனர்.
பைக்கில் சென்றவரிடம் நகை பறிப்பு
ஒண்டிப்புதுார், நஞ்சப்பா செட்டியார் வீதியை சேர்ந்த ரங்கராஜ்,57, மனைவியுடன் பைக்கில் மருத்துவமனைக்குச் சென்றார். ஒண்டிப்புதுார், இருகூர் ரோட்டில் சென்றபோது, பைக்கில் வந்த, 25 வயது மதிக்கத்தக்க மூவர், ரங்கராஜ் அணிந்திருந்த மூன்று சவரன் நகையை பறித்து தப்பினர். சிங்காநல்லுார் போலீசார், திருடர்களை தேடுகின்றனர்.