அரிவாளை காட்டி பணம் பறிப்பு
கோவை அம்மன்குளத்தை சேர்ந்தவர் ஞானராஜ், 40; மீன் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஞானராஜ், தனது பைக்கில் ராமநாதபுரம், 80 அடி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். அரிவாளை காட்டி மிரட்டி, ஞானராஜ் வைத்திருந்த ரூ.6,300 மற்றும் வெள்ளி செயினை பறித்து தப்பி சென்றனர். ஞானராஜ் புகாரின் படி, ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பணம் பறித்த இருவர் கைது
கோவை மசக்காளிபாளையத்தை சேர்ந்தவர் ஜோதி என்கிற கோபாலகிருஷ்ணன், 47; தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் இரவு, தனது வீட்டின் முன்பு நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு வாலிபர்கள், தாங்கள் மிகப்பெரிய ரவுடிகள் என்று ஜோதியின் கழுத்தில் கத்தியை வைத்து, பணம் கேட்டு மிரட்டினர்.
அவர் தன்னிடம் பணம் இல்லை என்றார். அந்த வாலிபர்கள் ஜோதி சட்டை பாக்கெட்டில் இருந்த, ரூ.300ஐ பறித்து தப்பிச்சென்றனர். ஜோதி புகாரின் படி, சிங்காநல்லுார் போலீசார் கத்தியை காட்டி பணம் பறித்த மசக்காளிபாளையத்தை சேர்ந்த கணேஷ் என்கிற வெற்றிவேல், 23, மற்றும் பீளமேட்டை சேர்ந்த கார்த்திகேயன், 29, ஆகிய இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
-- வீட்டின் புட்டை உடைத்து திருட்டு
கோவை சிங்காநல்லுார் அமர்ஜோதி நகரை சேர்ந்தவர் சாமிநாதன், 76; ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன், வீட்டை பூட்டி விட்டு மகள் வீட்டின் கிரகப்பிரவேசத்திற்கு சென்றார்.
அப்போது அவரது வீட்டின் அருகில் வசிக்கும் லாரன்ஸ் என்பவர், சாமிநாதனை தொடர்பு கொண்டு வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். சாமிநாதன் உடனே வீடு திரும்பினார்.
பீரோவில் வைக்கப்பட்டிருந்த, 3 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தது. சாமிநாதன் புகாரின் படி, சிங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.