பைக் விபத்தில் கல்லூரி மாணவர், பெண் பலி
போத்தனூர் : ஈச்சனாரியிலுள்ள தனியார் பல்கலையில் பழநியை சேர்ந்த சுரேஷ்குமார், 19, கார்த்தீஸ்வரன், 19 உடன், ஈச்சனாரியில் தங்கி இரண்டாமாண்டு பி.எஸ்சி., படித்து வந்தார். கடந்த 3ம் தேதி இரவு இருவரும் பைக்கில் பொள்ளாச்சி --- கோவை சாலையில், பிரீமியர் மில் கேட் அருகே வந்து கொண்டிருந்தனர்.
அப்போது சாலையை கடக்க முயன்ற பெண் மீது பைக் மோதியது. பைக்கை ஓட்டிய சுரேஷ்குமார் மற்றும் அப்பெண் படுகாயமடைந்தனர். அங்கிருந்தோர் இருவரையும், கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பரிசோதித்த டாக்டர்கள் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். கார்த்தீஸ்வரன் காயத்துடன் தப்பினார். செட்டிபாளையம் போலீசார் விசாரணையில், உயிரிழந்தது, அடைக்கலம் என்பவரின் மனைவி சசிகலா,35 என தெரிந்தது.
சமையல் செய்தபோது தீப்பிடித்து மூதாட்டி பலி
கோவை: ராமநாதபுரம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி, 80. இவர் கடந்த, 25ம் தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது உடையில் தீப்பிடித்தது. தீ உடல் முழுவதும் பரவியதால், அவர் வலியால் அலறி துடித்தார்.
அவரின் சத்தத்தை கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
--மெக்கானிக்கிடம் போன் பணம் பறிப்பு
கோவை: சிங்காநல்லுாரை சேர்ந்தவர் ஜோதிபாஸ், 40; டி.வி., மெக்கானிக். இவர் நேற்று முன்தினம், நீலிகோணாம்பாளையம் பஸ் ஸ்டாப்பில் நின்று மொபைல் போனில் பேசி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு பைக்கில் வந்த, 2 பேர் திடீரென அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, மொபைல் போன் மற்றும் ரூ.2800ஐ பறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஜோதிபாஸ் சத்தம் போட்டார்.
அவரின் சத்தத்தை கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி சென்றனர். ஜோதி பாஸ் புகாரின்படி, சிங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- கட்டடத்தொழிலாளியின் பைக் திருடிய வாலிபர் கைது
கோவை: காரமடையை சேர்ந்தவர் வினோத்குமார், 38; கட்டட தொழிலாளி. இவர் மசக்காளிபாளையம், கிருஷ்ணா நகரில் கட்டட வேலை செய்து வந்தார். கடந்த, 3ம் தேதி வினோத்குமார் தனது பைக்கை அங்கு நிறுத்தி விட்டு, காரமடை சென்றார். மறுநாள் காலை திரும்பி வந்து பார்த்த போது, பைக் காணாமல் போயிருந்தது. வினோத்குமார் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், பட்டுகோட்டையை சேர்ந்த பெயின்டர் வீரமணி, 26, என்பவர் பைக்கை திருடியது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
-- லாட்டரி விற்ற முதியவர் உட்பட இருவர் கைது
கோவை: வெரைட்டி ஹால் ரோடு போலீஸ் எஸ்.ஐ., தியாகராஜ் மற்றும் போலீசார் சலிவன் வீதி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த முதியவரை பிடித்து, சோதனை செய்தனர். அதில், அவரிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, போலீசார் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட உக்கடத்தை சேர்ந்த சையது அமீர், 63, என்பவரை கைது செய்தனர். அதேபோல, கடை வீதி போலீசார் கெம்பட்டி காலனி பகுதியில் லாட்டரி விற்ற மன்னர்சாமி, 46, என்பவரை கைது செய்தனர்.
-- டாஸ்மாக் கடை அருகே மது விற்ற வாலிபர் கைது
கோவை: மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., பாக்கியவதி மற்றும் போலீசார் தடாகம் ரோடு பகுதியில், நேற்று முன்தினம் காலை ரோந்து சென்றனர். அப்போது அங்கு டாஸ்மாக் கடை அருகே நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிந்தது. போலீசார், மது பாட்டில்களை விற்பனை செய்த புதுகோட்டையை சேர்ந்த காளிதாஸ், 34, என்பவரை கைது செய்தனர்.
நிதி நிறுவனம் நடத்தி ரூ.9 லட்சம் மோசடி
கோவை: காளப்பட்டி, வீரியம்பாளையம் ரோடு கணேஷ் நகரை சேர்ந்தவர் திருமூர்த்தி மனைவி ராதாமணி, 43. இவர் பீளமேடு போலீஸ் ஸ்டேஷனில், அளித்த புகாரில், 'கோவை வீரியம்பாளையம் நேரு நகரை சேர்ந்த கோபால் என்பவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
அவர் தனது நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால், அதிக வட்டி தருவதாக தெரிவித்தார். இதனை நம்பி நான், 2017ம் ஆண்டு முதல் வெவ்வேறு தவணைகளாக ரூ.9 லட்சம் செலுத்தினேன்.
ஆனால் அவர் கூறிய படி வட்டித்தொகை தரவில்லை. முதலீடு செய்த பணத்தையும் தராமல் மிரட்டல் விடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியிருந்தார். புகாரின் பேரில், போலீசார் கோபால் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
இரும்பு திருட்டு வெல்டர் கைது
போத்தனூர் : ஆத்துப்பாலம் அடுத்த கரும்புக்கடை, சவுகார் நகரை சேர்ந்தவர் முஹமது நியாசுதீன், 25. இவர் 'தற்போது வீடு கட்டி வருகிறார். இதற்காக இரும்பு உட்பட கட்டுமான பொருட்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் ஒருவர், இரும்பு பொருட்களை திருடினார். அங்கு சென்ற முஹமது நியாசுதீன் அந்நபரை பிடித்து, கரும்புக்கடை போலீசாரிடம் ஒப்படைத்தார். விசாரணையில், அந்நபர் உக்கடம், புல்லுக்காடு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த வெல்டர் ஷேக்மைதீன், 28 என தெரிந்தது. போலீசார் அவரை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
மாணவரை தாக்கிய இருவர் கைது
போத்தனூர் : சுகுணாபுரத்திலுள்ள தனியார் கல்லூரியில் இறுதியாண்டு பயில்பவர் சங்கீர்தன், 21. கடந்த, 2ம் தேதி தனது நண்பர் சபரியுடன், வசந்தம் நகரில் நின்றிருந்தார். அங்கு வந்த பிரஜ்வால், ஸ்ரீபிரதான் மேலும் இருவர் , சபரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை சங்கீர்தன் கேட்டபோது, அவரையும் சபரியையும் தாக்கினர். அங்கிருந்தோர் இருவரையும் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். சங்கீர்தன் புகாரின்பேரில், குனியமுத்தூர் போலீசார் பிரஜ்வால், ஸ்ரீபிரதான் இருவரையும் கைது செய்தனர். மேலும் இருவரை தேடுகின்றனர்.
கார் வெடித்து சேதம் போலீஸ் விசாரணை
கோவை: மதுரையை சேர்ந்தவர் சரவணன், 32. இவர் ஏ.சி., இயந்திரங்களில் காஸ் நிரப்பும் தொழில் செய்து வருகிறார். சரவணன் கோவை எருகம்பனி அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு தனது காரில் சென்றார். காரில் காஸ் நிரப்பும் இயந்திரம் வைத்திருந்ததாக தெரிகிறது.
அந்த இயந்திரம் திடீரென வெடித்தது. அதில் கார், முழுவதும் சேதமானது. தீ விபத்து ஏற்படாததால் யாருக்கும் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. சம்பவ இடத்துக்கு வந்த சாய்பாபா காலனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

