UPDATED : அக் 22, 2026 05:59 PM
ADDED : அக் 22, 2026 05:54 PM

கோவை: நொய்யல் ஆற்றின் வழித்தடத்தில் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், சிங்காநல்லுார் குளம், செல்வ சிந்தாமணி குளம், முத்தண்ணன்குளம், கிருஷ்ணாம்பதி குளம், செல்வம்பதி குளங்கள் உள்ளன. ஏற்கனவே பிளாஸ்டிக் குப்பை, கழிவு நீர், ஆக்கிரமிப்பு பிடியில் குளங்கள் சின்னாபின்னமாகி வருகின்றன.
புதிய பிரச்னையாக டேங்க் க்ளீனர் மீன்கள் உருவெடுத்துள்ளன. இவற்றால் குளங்களின் உயிர்ச்சூழலும், மீனவர்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த மீன் தென் அமெரிக்காவை சேர்ந்தது. பெயரே சொல்வது போல, மீன் தொட்டிகளை சுத்தப்படுத்த வாங்குவார்கள். அழுக்கு, பாசி, குப்பை ஆகியவற்றை விரும்பி சாப்பிடும். இது சற்று பெரிதானவுடன் பராமரிக்க முடியாமல் நீர்நிலைகளில் விட்டுவிடுகின்றனர்.
கோவையில் அனைத்து குளங்களிலும் இந்த மீனின் எண்ணிக்கை பெருகிவிட்டது. ஆப்ரிக்க கெளுத்தி மீனால் நாட்டு மீன்கள் அழிகின்றன. அதேபோல் டேங்க் க்ளீனராலும் பாதிப்பு ஏற்படுகிறது.
மீனவர்கள் கூறுகையில், ‘குளங்களில் வலை போட்டால் தினமும் 15 கிலோ டேங்க் க்ளீனர் கிடைக்கிறது. வலையும் கிழிகிறது. நாட்டு மீன் முட்டைகளையும் சாப்பிட்டு விடுகிறது. டேங்க் க்ளீனரை யாரும் வாங்குவதில்லை. கரைகளில் வீசி செல்கிறோம்’ என்றனர்.
