ADDED : செப் 29, 2026 06:13 PM
சோமனூர்: முதல்வர் விஜய் வருகையை அடுத்து, சோமனூர் வாரச்சந்தை இன்று செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய் தாராபுரம் இடைத்தேர்தலில் பிரசாரம் செய்ய இன்று கோவை வருகிறார். கோவையில் இருந்து கருமத்தம்பட்டி, சோமனூர், காரணம் பேட்டை, பல்லடம் வழியாக தாராபுரம் செல்கிறார்.
இந்நிலையில், ‘வாரந்தோறும் புதன் கிழமை நடக்கும் சோமனூர் சந்தை இன்று நடக்காது. அதற்கு பதிலாக நாளை வாரச்சந்தை நடக்கும்,’ என, நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
முதல்வர் வருகையை ஒட்டி, அவிநாசி ரோட்டில் உள்ள சின்னியம்பாளையம், நீலம்பூர், அரசூர், கணியூர் உள்ளிட்ட ஊராட்சிகள், கருமத்தம்பட்டி நகராட்சி, சோமனூர் - காரணம்பேட்டை ரோட்டில் உள்ள சாமளாபுரம் பேரூராட்சி மற்றும் இச்சிப்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் தூய்மைபணி தீவிரமாக நடந்து வருகிறது. ரோட்டை ஒட்டி கிடந்த குப்பை அகற்றப்பட்டு, தூய்மைப் படுத்தப்படுகின்றன. இப்பணியில் ஏராளமான தூய்மை பணியாளர்கள் கடந்த இரு நாட்களாக ஈடுபட்டுள்ளனர்.
ரோடுகளில் உள்ள குழிகளை சமன் செய்யும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
