/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை விமான நிலைய விரிவாக்க 'மாஸ்டர் பிளான்' ரெடி! சுற்றுச்சுவர் கட்ட ரூ.29 கோடிக்கு டெண்டர் கோரியது ஆணையம்
/
கோவை விமான நிலைய விரிவாக்க 'மாஸ்டர் பிளான்' ரெடி! சுற்றுச்சுவர் கட்ட ரூ.29 கோடிக்கு டெண்டர் கோரியது ஆணையம்
கோவை விமான நிலைய விரிவாக்க 'மாஸ்டர் பிளான்' ரெடி! சுற்றுச்சுவர் கட்ட ரூ.29 கோடிக்கு டெண்டர் கோரியது ஆணையம்
கோவை விமான நிலைய விரிவாக்க 'மாஸ்டர் பிளான்' ரெடி! சுற்றுச்சுவர் கட்ட ரூ.29 கோடிக்கு டெண்டர் கோரியது ஆணையம்
ADDED : மார் 21, 2025 02:30 AM
கோவை,: கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிக்கான 'மாஸ்டர் பிளான்' தயாரிக்கப்பட்டு, விமான நிலைய ஆணையத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கான தேவையான நிலத்தை, எவ்வித நிபந்தனையுமின்றி, 99 ஆண்டு குத்தகைக்கு, இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு தமிழக அரசு வழங்கியுள்ளது. அதற்கான எல்லை கற்கள் நடுவதற்கு ஏற்கனவே டெண்டர் கோரப்பட்டிருந்தது. தற்போது, புதிதாக கையகப்படுத்திய நிலங்களை சுற்றிலும், 16.67 கி.மீ., துாரத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
'ப்ரீ காஸ்ட்' தொழில்நுட்பத்தில் தயாரித்துள்ள கான்கிரீட் பலகைகள் மூலம் சுற்றுச்சுவர் எழுப்ப டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதற்காக, 29 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்பணியை, 456 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்கிற நிபந்தனையோடு, ஏப்., 11க்குள் டெண்டர் கோர, இந்திய விமான நிலைய ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
நில ஆலோசகர்
இதற்கிடையே, அரசு துறையில் ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவரை, நில ஆலோசகராக நியமிக்கவும் டெண்டர் கோரப்பட்டிருக்கிறது. அவர், கையகப்படுத்தி வழங்கப்பட்டுள்ள நிலத்தின் ஆவணங்களை சரிபார்ப்பது; இன்னும் வழங்காமல் உள்ள நிலத்தை கையகப்படுத்த துரித நடவடிக்கை எடுப்பது; நில ஆவணங்களை வைத்து சர்வே செய்வது; 'டிஜிட்டல்' வரைபடத்தை வைத்து தற்போதுள்ள இடத்தை ஆய்வு செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள இருக்கிறார்.
சுற்றுச்சூழல் அறிக்கை
அடுத்த கட்டமாக, எத்தனை மரங்கள் வெட்டப்பட உள்ளன. நீர் நிலைகள் இருக்கின்றனவா. நிலத்தடி நீர் மட்டம் எப்படி இருக்கிறது. மின் உபயோகம், குடிநீர் பயன்பாடு, கழிவு நீர் வெளியேற்றம், எத்தனை விமான பயணிகள் வந்து செல்கின்றனர், தற்போது எத்தனை விமானங்கள் இயக்கப்படுகின்றன; ஓடுதளம் நீளம் அதிகரித்த பின், இன்னும் எத்தனை விமானங்கள் இயக்கப்படும் என கணக்கிட்டு, ஒலி மாசு அளவிடுவது; விமான இன்ஜின் பகுதியில் இருந்து புகை வெளியேறும்போது, காற்று மாசடைவது குறித்து சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையம் ஆய்வு செய்து, அறிக்கை வழங்க உள்ளது.
இச்சூழலில், விமான நிலைய விரிவாக்கத்துக்கான 'மாஸ்டர் பிளான்' தயாரிக்கப்பட்டு, இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. 'மாஸ்டர் பிளான்' ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு செய்து, விரிவாக்கப் பணிகளுக்கு விரைவில் நிர்வாக அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.