/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை பாரதியார் பல்கலையில் வழிகாட்ட 'கைடு' இல்லை! ஆராய்ச்சி மாணவர்களுக்கு சிக்கல்
/
கோவை பாரதியார் பல்கலையில் வழிகாட்ட 'கைடு' இல்லை! ஆராய்ச்சி மாணவர்களுக்கு சிக்கல்
கோவை பாரதியார் பல்கலையில் வழிகாட்ட 'கைடு' இல்லை! ஆராய்ச்சி மாணவர்களுக்கு சிக்கல்
கோவை பாரதியார் பல்கலையில் வழிகாட்ட 'கைடு' இல்லை! ஆராய்ச்சி மாணவர்களுக்கு சிக்கல்
ADDED : செப் 18, 2024 10:53 PM

கோவை: கோவை பாரதியார் பல்கலையில், ஆராய்ச்சி மாணவர்களுக்கான நெறியாளர் அனுமதிக்கு விண்ணப்பித்த பேராசிரியர்களின் விண்ணப்பம், கிடப்பில் போடப்பட்டுள்ளதாக, புகார் எழுந்துள்ளது.
பல்கலை மானியக்குழு விதிமுறைகளின்படி, ஒரு உதவி பேராசிரியர், 4 ஆராய்ச்சி மாணவர்களுக்கும், ஒரு இணை பேராசிரியர், 6 மாணவர்களுக்கும், பேராசிரியர்கள், 8 மாணவர்களுக்கும் ஆராய்ச்சி படிப்புக்கு நெறியாளராக (வழிகாட்டி), செயல்பட முடியும்.
நெறியாளராக செயல்பட, குறிப்பிட்ட பல்கலையில், தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து பதிவு செய்வது அவசியம். பாரதியார் பல்கலை மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள, கல்லுாரிகளில் இருந்து தகுதியுள்ள உதவி பேராசிரியர்கள், இணைப்பேராசிரியர்கள், பேராசிரியர்கள், பல்கலையில், நெறியாளர்களாக, பதிவு செய்து சான்றிதழ் பெற்றுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக, நெறியாளர்களாக பதிவு செய்த பலரும் ஓய்வு பெற்றுள்ளனர். பாரதியார் பல்கலையில் உள்ள துறைகளில் மட்டும், 40 சதவீதம் அளவுக்கு நெறியாளர்கள் ஓய்வு பெற்றுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, புதிதாக நெறியாளர்களாக செயல்பட பலரும் விண்ணப்பித்துள்ளனர்.
ஆனால், இவர்களின் விண்ணப்பம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதன் காரணமாக மாணவர்களுக்கு திறமையான நெறியாளர்கள் கிடைப்பதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பி.எச்டி., படிப்புக்கு விண்ணப்பித்தும் உரிய நெறியாளர்கள் கிடைக்கும் வரை, மாணவர்கள் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, பாரதியார் பல்கலையால் அங்கீகரிக்கப்பட்ட கல்லுாரிகளில், ஆராய்ச்சி படிப்புகளை தொடர நினைக்கும் மாணவர்களுக்கு, சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பாரதியார் பல்கலை பதிவாளர்(பொறுப்பு) ரூபா கூறுகையில், ''பல்கலையை பொருத்தவரை, ஆராய்ச்சி மாணவர்களுக்கான நெறியாளர்களை தேர்வு செய்ய, 'ஏ', 'பி' என, பிரிவுகள் செயல்படுகின்றன.
'ஏ' பிரிவு பல்கலை துறை நெறியாளர்களுக்காகவும், 'பி' பிரிவு அங்கீகரிக்கப்பட்ட கல்லுாரிகளுக்காகவும் செயல்படுகிறது. நெறியாளர்கள் எண்ணிக்கை குறைவால், எவ்வித பாதிப்பும் இல்லை. இருக்கும் நெறியாளர்கள் மாணவர்களுக்கு உதவுவர்.
அங்கீகரிக்கப்பட்ட கல்லுாரிகளில், நெறியாளர்கள், குறைந்துள்ளதாக தெரியவில்லை. இருப்பினும், நெறியாளர்கள் பொறுப்புக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள், உடனடியாக பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு அனுமதி அளிக்கப்படும்,'' என்றார்.