/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாதுகாப்பில்லாத நிலையில் பட்டீஸ்வரர் கோவில் தேர்
/
பாதுகாப்பில்லாத நிலையில் பட்டீஸ்வரர் கோவில் தேர்
ADDED : ஜூலை 25, 2011 01:54 AM
பேரூர் : முறையான பாதுகாப்பு இல்லாததால் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் திருத்தேர் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் சிற்பங்கள் சிதிலடையும் நிலை ஏற்பட்டுள்ளது.கொங்கு நாட்டு வைப்புத் தலங்களில் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
ஆண்டுதோறும் பங்குனி உத்திர தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடக்கிறது. வரலாற்று புகழ் மிக்க இத்தேரில் பட்டீஸ்வரரும், பச்சைநாயகிஅம்மனும் சமேதரராக அமர்ந்து பேரூரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். இந்த விழாவில், கோவையின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமியை தரிசித்து செல்வர். தேர்த் திருவிழா நிறைவடைந்து தேர் நிலைக்கு வந்தடைந்ததும், தேருக்கு பாதுகாப்பாக கோவில் நிர்வாகம் சார்பில், 'தகர ஷீட்' பொருத்தப்படுவது வழக்கம்.
கடந்த பங்குனியில் தேரோட்ட விழா முடிந்துதற்போது நான்கு மாதமாகி விட்டது. கோவில் நிர்வாகம் சார்பில் தேருக்கு 'தகர ஷீட்' பொருத்தவில்லை. இதனால், தேர் பாதுகாப்பின்றி மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து, தேரிலுள்ள சிற்பங்கள் சிதிலமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. பகல், இரவு நேரங்களில் தேர் கரங்களின் அடியில், போதை ஆசாமிகள், பிச்சைக்காரர்கள் முகாமிட்டு பொழுதை கழித்து வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் கவலையடைகின்றனர். சிவபக்தர் பேரவையின் மாநில அமைப்பாளர் ராஜேந்திரன் கூறுகையில், ''பேரூர் கோவில் தேர், அவிநாசி தேருக்கு அடுத்தபடியாக பெரிய தேராகும். ''வட்ட வடிமான இத்தேரில் சிவபெருமானின் பல்வேறு முக பாவங்களை பிரதிபலிக்கும் தோற்றங்கள், சிற்பங்களாக இடம்பெற்றுள்ளன. சிறப்புவாய்ந்த இத்தேருக்கு உரிய பாதுகாப்பை கோவில் நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும்,'' என்றார்.