/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை வடக்கு கோட்டாட்சியர் ராணிப்பேட்டைக்கு இட மாற்றம்
/
கோவை வடக்கு கோட்டாட்சியர் ராணிப்பேட்டைக்கு இட மாற்றம்
கோவை வடக்கு கோட்டாட்சியர் ராணிப்பேட்டைக்கு இட மாற்றம்
கோவை வடக்கு கோட்டாட்சியர் ராணிப்பேட்டைக்கு இட மாற்றம்
ADDED : மே 30, 2025 12:25 AM
கோவை; கோவை வடக்கு கோட்டாட்சியர் கோவிந்தன், ராணிப்பேட்டைக்கு இட மாற்றம் செய்யப்பட்டார்.
கோவை, கிருஷ்ணசாமி நகரை சேர்ந்த ஜான் சாண்டி, 74 என்பவருக்கு சொந்தமாக, சின்னவேடம்பட்டி கிராமத்தில் நிலம் இருக்கிறது. அதற்கான பட்டாவில், சட்ட விரோதமாக சேர்க்கப்பட்ட இருவர் பெயரை நீக்க வேண்டுமென, மனு கொடுத்தார். இரு மாதத்துக்குள் இப்பிரச்னையை தீர்க்க, கோவை மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியது. அந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
அரசு அதிகாரிகளின் அக்கறையின்மை மற்றும் அலட்சியத்தை சுட்டிக்காட்டிய ஐகோர்ட் நீதிபதி, முன்னாள் கலெக்டர், டி.ஆர்.ஓ., மற்றும் வடக்கு கோட்டாட்சியர் கோவிந்தன் ஆகியோருக்கு தலா, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். முன்னாள் வடக்கு தாசில்தார் மணிவேலுக்கு ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும் ஒரு மாதம் ஊதியத்தை, மனுதாரருக்கு இழப்பீடாக வழங்க உத்தரவிட்டது. மேல்முறையீடு செய்வதற்காக, இத்தண்டனை ஒரு மாதம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதேபோல், மற்றொரு வழக்கில், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத காரணத்தால், தாசில்தார்கள் வெங்கட்ராமன், ஸ்ரீமாலதி, சத்யன், வி.ஏ.ஓ., விஜயகுமார் ஆகியோருக்கு தலா ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும், தலா, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டதை தொடர்ந்து, தண்டனைக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இச்சூழலில், கோவை வடக்கு கோட்டாட்சியர் கோவிந்தன், ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு கலெக்டரின் நேர்முக உதவியாளராக (பொது) நேற்று மாற்றப்பட்டார். இது, வருவாய்த்துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.