/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை தபால் கோட்டத்துக்கு மாநில அளவிலான விருது
/
கோவை தபால் கோட்டத்துக்கு மாநில அளவிலான விருது
ADDED : செப் 07, 2025 11:03 PM

கோவை; இந்திய தபால் துறையில் பாமரமக்கள் பயன்பெறும் வகையில், அதிக எண்ணிக்கையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
முக்கியமாக, ஆண்டு பிரீமியம் ரூ.20 மட்டுமே செலுத்தி ரூ.2 லட்சத்திற்கு விபத்து பாலிசி பெறும் பி.எம்.எஸ்.பி.ஒய்., ரூ.436 மட்டுமே செலுத்தி ரூ.2 லட்சத்துக்கு ஆயுள் காப்பீட்டு பாலிசி பெறும் பி.எம்.ஜே.ஜே.பி.ஒய்., போன்ற மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை, அதிக மக்களுக்கு கொண்டு சேர்த்ததில், மாநில அளவில், கோவை தபால் கோட்டம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
கடந்த நிதியாண்டில், இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியில் அதிக எண்ணிக்கையில், விபத்துக் காப்பீடு பிடித்த வகையில், கோவை தெற்கு உட் கோட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது. 2025---26ம் நிதியாண்டின் முதல் காலாண்டில், பொதுமக்கள் அதிகம் பயன்பெறும் வகையில் ஆதார் சேவையில் அதிக திருத்தங்களை செய்வதில், கோவை கோட்டம், மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது.
மேற்கண்ட நடவடிக் கைகளால், கோவை கோட்டம் கடந்த நிதியாண்டில் அதிக வளர்ச்சி பெற்று மாநில அளவில் மூன்றாம் இடத்தை பிடிக்க உதவியது.
வெளிநாடுகளுக்கு மிக குறைந்த செலவில் பார்சல்களை அனுப்ப பயன்படும் ஐ.டி.பி.எஸ்., சேவை வாயிலாக, அதிக பார்சல்களை அனுப்பியதன் வாயிலாக, அதிக வருமானத்தை 2025---26 நிதியாண்டின் முதல் காலாண்டில் ஈட்டி, மாநில அளவில் கோவை கோட்டம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
இதற்காக, சென்னையில் சமீபத்தில் நடந்த விழாவில், கோவை தபால் கோட்ட கண்காணிப்பாளர் சிவசங்கருக்கு, தமிழ்நாடு வட்ட முதன்மை தபால் துறை தலைவர் மரியம்மா தாமஸ் விருது வழங்கினார்.