/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையின் 'கோடீஸ்வரருக்கே' பட்டா வழங்காமல் இழுத்தடிப்பு!
/
கோவையின் 'கோடீஸ்வரருக்கே' பட்டா வழங்காமல் இழுத்தடிப்பு!
கோவையின் 'கோடீஸ்வரருக்கே' பட்டா வழங்காமல் இழுத்தடிப்பு!
கோவையின் 'கோடீஸ்வரருக்கே' பட்டா வழங்காமல் இழுத்தடிப்பு!
ADDED : பிப் 13, 2024 12:16 AM

பேரூர்;பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவிலுக்கு பட்டா வழங்காமல் இழுத்தடிப்பது ஏன், என்ற கேள்வி சிவபக்தர்களிடம் எழுந்துள்ளது.
பல கோடி ரூபாய் சொத்துக்கு உரிமையாளராகவும், கோவையின் அடையாளமாகவும் வீற்றிருக்கிறார் பேரூர் பட்டீஸ்வர சுவாமி. பேரூர் புராணத்தில் சுவாமிக்கு மாவுத்தம்பதி, குனியமுத்துார் உள்ளிட்ட கிராமங்களில் இனாம் பூமிகள் தவிர்த்து, 14,200 ஏக்கர் நிலங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால், ஆக்கிரமிப்பு, விற்பனை உள்ளிட்ட காரணங்களால், பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மாயமாகிவிட்டன. 2023ல் சுமார், ரூ.100 கோடி மதிப்பிலான, 17.96 ஏக்கர் நிலம் போலீஸ் பாதுகாப்புடன் மீட்கப்பட்டது.
தற்போது, 372 ஏக்கர் நிலம் மட்டுமே பட்டீஸ்வரரிடம் உள்ளது. அதிலும், 165 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. நிலங்களை மீட்க, கோர்ட்களில் வழக்குகளும் நடந்து வருகின்றன.
அதிகாரிகள் அலட்சியம்...
இவை ஒருபுறம் இருக்க, 1,800 ஆண்டு பழமையான இத்திருக்கோவிலுக்கு பட்டா கூட இல்லை. சிவபக்தர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர்.
இது, சிவபக்தர்கள் மற்றும் ஹிந்து அமைப்புகளை கொதிப்படைய செய்கிறது. அதிகாரிகளிடம் எப்போது கேட்டாலும், 'பட்டா கோரி விண்ணப்பித்துள்ளோம்' என்றே கூறுகின்றனர்.
ஆனால், திருக்கோவிலுக்கு பட்டா கிடைத்தபாடில்லை. இன்னும், நான்கு மாதங்களில் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்குள் பட்டா வழங்காவிடில், பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.
பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உதவி ஆணையர் விமலாவிடம் கேட்டபோது, ''நிலத்தை சர்வே செய்து பட்டா வழங்க தாசில்தார், ஆர்.டி.ஓ., டி.ஆர்.ஓ.,வுக்கு விண்ணப்பித்துள்ளோம்,'' என்றார்.
பேரூர் தாசில்தார் ஜோதி பாசுவிடம் கேட்டபோது, ''விண்ணப்பம், ஆவணங்களை ஆய்வு செய்து, மேல் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
இப்படியே எத்தனை ஆண்டுகள் தான் காலம் தாழ்த்துவர் என தெரியவில்லை. மாவட்ட கலெக்டர் இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வுகாண வேண்டும் என்பதே, சிவபக்தர்களின் எதிர்பார்ப்பு.