/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அனுமதியற்ற கட்டடங்களை இடிக்க... கலெக்டர் அதிரடி; கமிட்டி 'ரெடி!' அடுத்த மாதத்தில் பணி துவக்கம்
/
அனுமதியற்ற கட்டடங்களை இடிக்க... கலெக்டர் அதிரடி; கமிட்டி 'ரெடி!' அடுத்த மாதத்தில் பணி துவக்கம்
அனுமதியற்ற கட்டடங்களை இடிக்க... கலெக்டர் அதிரடி; கமிட்டி 'ரெடி!' அடுத்த மாதத்தில் பணி துவக்கம்
அனுமதியற்ற கட்டடங்களை இடிக்க... கலெக்டர் அதிரடி; கமிட்டி 'ரெடி!' அடுத்த மாதத்தில் பணி துவக்கம்
ADDED : மே 20, 2024 12:09 AM
-நமது நிருபர்-
அனுமதியற்ற கட்டடங்களை இடிப்பதற்கு உயர் மட்டக் கமிட்டி அமைப்பது தொடர்பான அரசாணை குறித்து, 'தினமலர்' நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியாக, கோவையில் இதற்கான கமிட்டியை அமைப்பதற்கு கோவை கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புறங்களில் அனுமதியற்ற, விதிமீறல் கட்டடங்கள் அதிகளவில் கட்டப்படுவதும், ஏதாவது ஒரு வழக்கில் கோர்ட்கள் உத்தரவிடும்போது, ஒட்டு மொத்தமாக இந்த கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுப்பதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. அனுமதியற்ற கட்டடங்கள் கட்டுவதை, நிரந்தரமாகத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, தமிழக அரசுக்கு ஐகோர்ட் பல தீர்ப்புகளில் அறிவுறுத்தியுள்ளது.
அதன் அடிப்படையில் தான், உரிய அதிகார அமைப்பிடம் கட்டட நிறைவுச் சான்று பெறும் கட்டடங்களுக்கு மட்டுமே, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படுமென்று, கடந்த 2019ல் தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள் வகுக்கப்பட்டன.
அதற்குப் பின்னும் பல விதமான விதிமீறல்களிலும், அனுமதியின்றியும் கட்டடங்கள் கட்டுவது தொடர்கிறது.
அரசாணை
தனி வீடுகளை அனுமதியின்றிக் கட்டுவதால், சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால், தொழில், வணிகம் மற்றும் கல்வி நிறுவனக் கட்டடங்களை, அனுமதியின்றியும், விதிகளை மீறியும் கட்டடம் கட்டும்போது, பொதுமக்களுக்கும் பல விதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.
குறிப்பாக, 'பார்க்கிங்' இடங்கள் விடப்படுவதில்லை; விபத்துக்காலங்களுக்கேற்ற அவசர வழி, பக்கத்திறவிடம் இருப்பதில்லை. இத்தகைய அனுமதியற்ற கட்டடங்கள் கட்டப்படுவதைத் தடுப்பதற்கு, அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை, சமீபத்தில் உத்தரவிட்டது.
அதன் காரணமாக, அனுமதியற்ற மற்றும் விதிமீறல் கட்டடங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு, மாவட்டம்தோறும் உயர் மட்டக் கமிட்டி அமைப்பதற்கு, கடந்த மார்ச் 1ல் அரசாணை வெளியிடப்பட்டது.
ஆலோசனை
அனுமதியற்ற, விதிமீறல் கட்டடங்கள், ரிசர்வ் சைட் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அதிகமுள்ள கோவையில், இரு மாதங்களாகியும் இந்த கமிட்டி அமைக்கப்படவில்லை.
இதுகுறித்து நமது நாளிதழில், கடந்த மே 13 அன்று, 'அரசாணை ரெடி: ஆரம்பமாகட்டும் அதிரடி!' என்ற தலைப்பில் விரிவான செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதன் எதிரொலியாக, மாநகராட்சி, காவல்துறை மற்றும் மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளை அழைத்து, கோவை கலெக்டர் கிராந்திகுமார் கடந்த வாரம் ஆலோசனை நடத்தி, கமிட்டி அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதன்படி, அனுமதியற்ற கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான உயர்மட்டக்குழு விரைவில் அமைக்கப்படவுள்ளது. அடுத்த மாதத்திலிருந்து இந்த குழு, தன் பணியைத் துவக்கும் என்று அதிகாரிகள் உறுதியளிக்கின்றனர். முதலில் ரிசர்வ் சைட்களில் உள்ள அனுமதியற்ற கட்டடங்கள், அனுமதியற்ற வணிக கட்டடங்கள் மீது தான் நடவடிக்கை பாயுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

