UPDATED : அக் 22, 2026 06:31 PM
ADDED : அக் 22, 2026 06:26 PM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, கொண்டம்பட்டியில் உள்ள மகாராஜா அலைடு ஹெல்த் சைன்ஸ் கல்வி நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளாக செயல்படுகிறது. இந்த கல்வி நிறுவனத்துக்கு முறையான அங்கீராம் இல்லாததால் மாவட்ட நிர்வாகம் சார்பில் கல்லூரி வளாகம் முன்பு அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அங்கு படித்து வரும் மாணவர்கள் சிலர் தங்களிடம் பெற்ற கல்விக்கட்டணம் மற்றும் சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகத்திடம் திரும்ப கேட்டதற்கு, நிர்வாகம் தரப்பில் தாமதப்படுத்தப்பட்டது.
இதை கண்டித்து மாணவர்கள் நேற்று கல்லூரி வளாகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கிணத்துக்கடவு போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் பேச்சு நடத்தினர். அதன்பின், இரு மாணவர்களுக்கு கல்வி சான்றிதழ் வழங்கப்பட்டது.
போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் கூறுகையில், ‘மாணவர்கள் சிலர் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டு கல்வி கட்டணத்தை திரும்ப கேட்டு வழக்கு தொடர்ந்து உள்ளனர். இதில், ஒரு சில மாணவர்களுக்கு குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் வர உள்ளது. அதன் பின் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல் படி நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர்.
கல்லூரி முதல்வர் அனிதா கூறுகையில், ‘‘மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் படி, ஒரு சில மருத்துவ படிப்பிற்கு அட்மிஷன் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு திட்டம் வாயிலாக, தையல் பயிற்சி மற்றும் டிப்ளமோ படிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது,’’ என்றார்.
