/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வணிக வளாக கடைகள் ஏலத்தில் எடுக்க கடும் போட்டி
/
வணிக வளாக கடைகள் ஏலத்தில் எடுக்க கடும் போட்டி
ADDED : ஜூலை 17, 2025 10:33 PM

சூலுார்; சூலுார் பேரூராட்சியில் புதிதாக கட்டப்பட்ட வணிக வளாக கடைகளை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நிலவியது.
சூலுார் பேரூராட்சியில், பழைய பஸ் ஸ்டாண்ட் இருந்த இடத்தில், புதிதாக வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இரு தளங்களில், தலா, 20 கடைகள் என, மொத்தம், 40 கடைகள் உள்ளன. இதற்கான ஏலம், கடந்த, 4 ம்தேதி நடப்பதாக இருந்தது.
வைப்பு தொகை, சால்வன்சி தொகை மிக அதிகமாக உள்ளதாக எதிர்ப்பு கிளம்பியது. இதனால், ஏலம் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, சால்வன்சி, வைப்புத் தொகை, தலா ஒரு லட்சம் குறைக்கப்பட்டு, செயல் அலுவலர்கள் சரவணன், சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் நேற்று ஏலம் நடந்தது.
ஏலத்தில் பங்கேற்க, 60 க்கும் மேற்பட்டோர் பணம் செலுத்தியிருந்தனர். ஏலத்தில் பங்கேற்போருக்கு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டு, அவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். தரைத்தள கடைகளுக்கு கடும் போட்டி இருந்தது. அதிகபட்சமாக ஒரு கடை, 71 ஆயிரம் ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக, 35 ஆயிரம் ரூபாய்க்கும் ஏலம் போனது. இரு கடைகளுக்கான ஏலத்தில் அதிகபட்சமாக, 95 ஆயிரம் ரூபாயும், குறைந்த பட்சமாக, 60 ஆயிரம் ரூபாய்க்கும் எடுக்கப்பட்டது.
இதேபோல், முதல் தளத்தில், குறைந்த பட்சமாக, ஒரு கடை, 14 ஆயிரத்து, 200 ரூபாய்க்கு ஏலம் போனது. இரு கடைகள் கொண்ட நான்கு கடைகளை யாரும் ஏலம் எடுக்கவில்லை. தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இரு கடைகள் ஏலம் நடத்தப்படவில்லை.