கல்லுாரிகளில் வைத்து...
குறைகள் அறிய உத்தரவு!
கோவை, அக்.5-
மாணவர்களின் புகார்களை பெற புகார் பெட்டிகளை ஏற்படுத்த, கல்லுாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கல்லுாரி மாணவ, மாணவியர் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை வெளிப்படையாக தெரிவிக்காததால், குற்றச்சம்பவங்கள் ஏற்படுவதாக தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது.
குறிப்பாக, மாணவியருக்கு ஏற்படும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து புகார் தெரிவிக்காததால், அது தொடர்வது அதிகரிப்பதாக, அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.
இதைத்தடுக்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கல்லுாரிகளில் புகார் பெட்டிகள் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் தெரிவிக்கும் புகார்களை பெற்று, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க, இரு ஆசிரியர்களை நியமிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் கலைச்செல்வி கூறுகையில், ''மாணவர்கள் புகார்களை தங்கள் பெயர் இல்லாமலும் தெரிவிக்கலாம். அந்த புகார்கள் மீதும் விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக இரு கல்லுாரி பேராசிரியர்கள் நியமிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. எந்த ஒரு புகாரையும், அலட்சியமாக விடக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவியர் தொடர்பான புகார்களை, பெண் பேராசிரியர்கள் விசாரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.