/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூட்டுறவு சங்க ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தம்
/
கூட்டுறவு சங்க ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தம்
ADDED : அக் 07, 2025 10:55 PM

- நிருபர் குழு -
தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் மற்றும் ரேஷன் கடை ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தம் காரணமாக, கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மாநில கூட்டுறவு அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில், 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கியுள்ளனர்.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதியிலுள்ள, 56 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், நகர கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அவற்றின் கீழ் இயங்கும், 154 ரேஷன் கடை ஊழியர்கள் என, 320 பேர் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால், தொடக்கவேளாண் கூட்டுறவு சங்கங்களில் வழக்கமான பணிகள் பாதித்துள்ளதோடு, ரேஷன் கடைகளில் பொருட்கள் வினியோகமும் பாதித்துள்ளது.
இதற்கான ஆயத்த கூட்டம், மடத்துக்குளம் மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் சாமியப்பன் தலைமை வகித்து, கோரிக்கைகள் குறித்து விளக்கிப்பேசினார்.
ஒன்றிய பொருளாளர் சின்னத்துரை முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் கண்ணன், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
* பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை ஒன்றியங்களின் கூட்டுக்கூட்டம், ஆழியாறில் நடந்தது. மாவட்ட துணை தலைவர் நாட்டுத்துரை தலைமை வகித்தார். ஆனைமலை ஒன்றிய செயலாளர் திருமூர்த்தி, ஒன்றிய தலைவர் ராமசாமி, நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இதில், ஊதிய உயர்வு வெளிப்படைத்தன்மையுடன், சங்கங்களை வகைப்பாடு செய்யாமல், லாப நஷ்டங்களை கணக்கில் கொள்ளாமல், கடந்த, 2018ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி பெற்ற சம்பளத்தின் மீது, 20 சதவீதம் ஊதிய உயர்வு எவ்வித நிபந்தனையு மின்றி அனுமதிக்க வேண்டும்.
கடந்த, 2021ம் ஆண்டுக்கு பின் ஓய்வு பெற்ற பணியாளர்கள் அனைவருக்கும் உடனடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட, 25 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.