/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நொய்யல் ஆறு சீரமைப்பு கருத்து கேட்ட மாநகராட்சி
/
நொய்யல் ஆறு சீரமைப்பு கருத்து கேட்ட மாநகராட்சி
ADDED : அக் 16, 2025 05:41 AM

கோவை: நொய்யல் ஆறு மாசுபடுவதை தடுக்கவும், ஆக்கிரமிப்பு அகற்றவும், இரு கரைகளிலும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ப கட்டமைப்புகள், பூங்காக்கள் ஏற்படுத்த, ரூ.200 கோடிக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனரகத்துக்கு, மாநகராட்சி சமர்ப்பித்தது.
இது குறித்து, பொதுமக்களிடம் கருத்து கேட்பதற்கான ஆலோசனை கூட்டம், போத்தனுாரில் நேற்று நடந்தது. துணை மேயர் வெற்றிச் செல்வன் முன்னிலை வகித்தார்.
திட்ட செயலாக்கம் பற்றி, மாநகராட்சி துணை தலைமை பொறியாளர் இளங்கோவன் கூறியதாவது:
மாநகராட்சி பகுதியில் 18.56 கி.மீ., துாரத்துக்கு நொய்யல் ஆறு பயணிக்கிறது. ஆற்றின் இரு கரையும் பலப்படுத்தப்படும். மூன்று இடங்களில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்படும். தேவையான இடங்களில் கிணறு அமைத்து, சேகரித்து, 'பம்ப்' செய்யப்படும்.
ஆத்துப்பாலத்தில் இருந்து நஞ்சுண்டாபுரம் வரை கரையை பலப்படுத்தி, 7 மீட்டர் அகலத்துக்கு சாலை வசதி ஏற்படுத்தப்படும். நான்கு இடங்களில் பூங்காக்கள் உருவாக்கப்படும். ரூ.200 கோடியில் செயல்படுத்தும் இத்திட்ட அறிக்கையை, 'டுபிட்சல்' பரிசீலித்து வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், 'வீடுகளை பாதிக்காத வகையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நீர் நிலைகளில் வசிப்போருக்கு மாற்று வீடு வழங்க வேண்டும். ஆற்றில் கழிவு நீர் கலப்பதை துவக்கத்தில் இருந்து கடைசி வரை தடுக்க வேண்டும்' என்றனர்.
கூட்டத்தில், உதவி நிர்வாக பொறியாளர்கள் கனகராஜ், ஹேமலதா, நீர்வளத்துறை பொறியாளர் (ஓய்வு) இளங்கோவன், கவுன்சிலர்கள் அப்துல் காதர், அஹமது கபீர், சிவா, ரேவதி, அலிமா மேகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.