/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாதாள சாக்கடை திட்டத்தில் ஊழல்
/
பாதாள சாக்கடை திட்டத்தில் ஊழல்
ADDED : அக் 18, 2024 10:41 PM

மேட்டுப்பாளையம்,: பாதாள சாக்கடை திட்டத்தில், வீடுகளில் இருந்து வரும் குழாயை, மெயின் கழிவுநீர் குழாயுடன் இணைப்பதில் ஊழல் நடைபெறுகிறது. எனவே இத்திட்டத்தை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செல்வராஜ் தெரிவித்தார்.
மேட்டுப்பாளையம் நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. நகரின் ஒட்டுமொத்த கழிவுநீரும், பவானி ஆற்றில் பல்வேறு இடங்களில் கலந்து வருகின்றன.
மேட்டுப்பாளையம் நகரில் இருந்து, சிறுமுகை வரை உள்ள பவானி ஆற்றில், 16 குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது. கழிவு நீர் கலந்த தண்ணீரை குடிப்பதால், பொதுமக்கள் பல்வேறு வகையில் பாதிப்பு அடைகின்றனர். அதனால் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
கடந்த ஆறு ஆண்டு களுக்கு முன், பாதாள சாக்கடை திட்டம் மேட்டுப்பாளையம் நகரில் அமைக்க, தமிழக அரசு, 100.07 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. நகரில், கெண்டையூர் சாலை, தாசம்பாளையம் சாலை, உப்புப்பள்ளம், மதீனா நகர், மொக்கை மேடு ஆகிய ஐந்து இடங்களில், கழிவு நீர் சேமிப்பு தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. இந்த தொட்டிகளில் இருந்து, அனைத்து கழிவு நீரும், தானியங்கி மின்மோட்டார் வாயிலாக, வெள்ளிப்பாளையம் சாலையில் உள்ள ராட்சத கழிவு நீர் தொட்டிக்கு பம்பிங் செய்யப்படுகிறது.
அங்கு இருந்து நகராட்சி குப்பை கிடங்கில் அமைத்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு, மின்மோட்டார் வாயிலாக பம்பிங் செய்யப்படுகிறது. பாதாள சாக்கடை திட்டம் சரியாக செயல்படாததால் மலம் கலந்த கழிவு நீர் பவானி ஆற்றில் கலப்பதாக,பொதுமக்கள் பரவலாக புகார் கூறி வருகின்றனர்.
இது குறித்து மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ஆகியோர் பாதாள சாக்கடை திட்ட பணிகளையும், கழிவுநீர் சேமிப்பு தொட்டிகளையும், நீருந்து நிலையங்களையும் ஆய்வு செய்தனர். இவர்களுடன் பாதாள சாக்கடை திட்டத்தை கண்காணிக்கும் குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் மஞ்சுளா தேவி, நகராட்சி உதவி பொறியாளர் மனோகரன் ஆகியோர் ஆய்வில் உடன் இருந்தனர். அனைத்து பகுதிகளையும் சுற்றிப் பார்த்த எம்.எல்.ஏ., செல்வராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:
மேட்டுப்பாளையம் நகரில், 17,000 வீடுகள் உள்ளன. இதில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு இணைக்க, 10,240 வீடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை, 2,770 வீடுகளுக்கு மட்டுமே, பாதாள சாக்கடை திட்டத்தில், குழாய் இணைக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பம்பிங் செய்யப்படுகிறது. ஆனால் சில நேரங்களில் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பாமல் நேரடியாக மலம் கலந்த கழிவு நீரை, சாக்கடை வழியாக பவானி ஆற்றில் கலப்பதாக, மக்கள் மத்தியில் கூறப்பட்டு வருகிறது.
இந்த ஆற்று நீரை நம்பி, 16 குடிநீர் திட்டங்கள் செயல்படுகின்றன. இந்த கழிவு நீர் கலந்த தண்ணீரை குடித்தால் மக்களுக்கு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் பாதாள சாக்கடை திட்ட பணிகள், மிகவும் மெதுவாக நடைபெற்று வருகின்றன.
வீடுகளில் இருந்து வரும் கழிவு நீர் குழாய்களை, மெயின் கழிவு நீர் குழாயுடன் இணைக்கும் பொறுப்பு, நகராட்சி நிர்வாகம் செய்ய வேண்டும். இந்த குழாய் பதிப்பதில் ஊழல் நடைபெற்று வருவதாகவும் மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
எனவே நகராட்சி அதிகாரிகளும், பாதாள சாக்கடை திட்ட அதிகாரிகளும், இந்த திட்டத்தை விரைவாக முடித்து, முழுமையான அளவில் கழிவு நீரை சுத்தம் செய்ய வேண்டும் இவ்வாறு எம்.எல்.ஏ., கூறினார்.