/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேர்தல் செலவு குறித்து கவுன்சிலர்கள் சந்தேகம்: மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை
/
தேர்தல் செலவு குறித்து கவுன்சிலர்கள் சந்தேகம்: மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை
தேர்தல் செலவு குறித்து கவுன்சிலர்கள் சந்தேகம்: மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை
தேர்தல் செலவு குறித்து கவுன்சிலர்கள் சந்தேகம்: மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை
ADDED : ஜன 12, 2024 10:38 PM

அன்னுார்;'இரண்டு ஆண்டுக்கு முன்பு நடந்த தேர்தல் செலவு குறித்து மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்,' என கவுன்சிலர்கள் ஒன்றிய கூட்டத்தில் புகார் தெரிவித்தனர்.
அன்னுார் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நேற்றுமுன்தினம் நடந்தது. ஒன்றிய சேர்மன் அம்பாள் பழனிசாமி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லதா, செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் 79 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. 2021ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தல் செலவு க்கு அங்கீகாரம் அளிக்கும் தீர்மானம் மீண்டும் கொண்டு வரப்பட்டது.
அப்போது கவுன்சிலர் பிரபு உள்ளிட்டோர் பேசுகையில், 'தேர்தல் முடிந்து இரண்டரை ஆண்டு ஆகிவிட்டது. இதுவரை நான்கு முறை தேர்தல் செலவு என பில் சமர்ப்பிக்கின்றனர். இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மாவட்ட அதிகாரிகள் செலவு கணக்குகளை ஆய்வு செய்ய வேண்டும். இந்தத் தொகையை அனுமதிக்க கூடாது,' என எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அந்த தீர்மானம் நிறுத்தி வைக்கப்பட்டது.
தி.மு.க., கவுன்சிலர் செல்வராஜ் பேசுகையில், 'எனது வார்டில் பஸ் ஸ்டாப் உள்ளிட்ட பணிகளை எடுத்து ஒப்பந்ததாரர் ஓராண்டுக்கு மேலாகியும் பணியை முடிக்கவில்லை. கேள்வி கேட்கும் மக்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை.
அதிகாரிகள் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க அஞ்சுகின்றனர். பணிகளை குறித்த காலத்தில் முடிக்காத ஒப்பந்ததாரர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றார்.
பா.ஜ., கவுன்சிலர் ஜெயபால் பேசுகையில், 'அன்னுார் ஒன்றியத்தில் காரே கவுண்டம்பாளையத்தில் மட்டும் சொந்த வீடும் நிலமும் இல்லாத 400 ஏழை எளிய குடும்பங்கள் இருக்கின்றனர்.
இவர்களுக்கு பட்டா வழங்குவதற்காக வருவாய் துறையிடம் பலமுறை அணுகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கு அரசு நிலம் உள்ளது என்பதை தெரிவித்தும் அலட்சியப்படுத்துகின்றனர்,' என்றார். சேர்மன் பேசுகையில், 'ஊராட்சிகளில் உள்ள மேல் நிலை தொட்டிகள் நிர்ணயிக்கப்பட்ட நாட்களில் சுத்தப்படுத்தப்படுகிறதா என மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு செய்வதில்லை.
ஊராட்சியில் எவ்வளவு மேல்நிலைத் தொட்டி, தரைமட்ட தொட்டி உள்ளது என்பதே அதிகாரிகளுக்கு தெரியவில்லை. வருடத்திற்கு மூன்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்படுகின்றனர்.இதனால் ஊராட்சி ஒன்றியத்தில் பணிகள் பாதிக்கப்படுகின்றன,' என்றார்.
கவுன்சிலர்கள் பேசுகையில், 'டெங்கு கொசு தடுப்பு பணியாளர்கள் குறைவான அளவில் வேலைக்கு வந்தாலும் அனைவரும் வந்ததாக கணக்கு காண்பிக்கப்படுகிறது.
கனுவக்கரை ஊராட்சி உள்பட பல இடங்களில் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஏழை குழந்தைகள் கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,' என்றனர்.
கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள், வேளாண், சுகாதாரம், குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.