ADDED : ஜூலை 13, 2026 08:40 AM
குளிக்க சென்ற மாணவன் பலி
பேரூர் : தீனம்பாளையம், சிம்சன் நகரை சேர்ந்த முருகன் மகன் பிரனேஷ்,17. நவாவூர் தனியார் பள்ளியில், பிளஸ் 1 படித்தார். நேற்று நண்பர்கள் 6 பேருடன், குனியமுத்தூர் தடுப்பணையில் குளிக்க சென்றுள்ளார். நீச்சல் தெரியாததால், பிரனேஷ் நீரில் மூழ்கினார். தொண்டாமுத்தூர் தீயணைப்பு வீரர்கள் பிரனேஷை சடலமாக மீட்டனர். பேரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
இரும்பு கம்பி திருட்டு குனியமுத்துார் : குனியமுத்தூர், அரசு குடியிருப்பு காலனியை சேர்ந்தவர் அரவிந்த் 27. கே.ஜி.கே. சாலையில், பழைய இரும்பு பொருட்கள் கடை வைத்துள்ளார். கடந்த, 29 முதல் 2 ம் தேதி வரை கடையில் வைத்திருந்த, 60 கிலோ செம்பு கம்பி திருட்டு போனது. குனியமுத்தூர் போலீசார் விசாரித்து, கரும்புக்கடை, இலாஹி நகர், ஆஷிப் 25, புல்லுக்காடு ஹவுசிங் யூனிட், முஹமது யாசர், 24, ஆசாத் நகர், ஜாபர் அலி, 31 ஆகியோரை கைது செய்தனர். பர்னபாஸ் என்பவரை தேடுகின்றனர். 14 கிலோ செம்பு கம்பி மீட்கப்பட்டது.
போதைப்பொருள் பறிமுதல்
ஆத்துப்பாலம் : கரும்புக்கடை போலீசார் ஆத்துபாலம், பூங்கா நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள ஒரு கடையின் பின்புறம் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இருவரிடம் விசாரித்தனர். உக்கடம், புல்லுக்காடு, ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த சனூப், 28, குனியமுத்தூர், மைல்கல், சக்தி விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த அப்பாஸ், 37 என தெரிந்தது. இருவரும் 2 கிலோ கஞ்சா, டெபன்டடால் மாத்திரைகள், 101 வைத்திருந்தனர். பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.
பைக்குகள் திருடியவர் கைது
மதுக்கரை: மதுக்கரை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பைக் திருட்டு அதிகரித்தது. இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் அறிவுறுத்தலில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில் சிக்கிய ஒருவரிடம் விசாரித்தபோது, தஞ்சாவூர் மாவட்டம், துவரங்குறிச்சி, கீழக்காடு பகுதியை சேர்ந்த 18 வயது நபர் என்பதும், பைக் திருட்டில் ஈடுபட்டதும் தெரிந்தது. அவரது தகவலின் அடிப்படையில், ரூ.5.5 லட்சம் மதிப்பிலான நான்கு யமஹா பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
