ADDED : அக் 23, 2026 09:57 PM

லாரி மோதி ஒருவர் பலி
சரவணம்பட்டி: சத்தி ரோடு வி.கே.ரோட்டில் அதிவேகமாக வந்த லாரி, பைக்கில் சென்றவர் மீது மோதியதில், மயில்சாமி என்பவர் கீழே விழுந்தார். பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். லாரி ஓட்டுநர் சந்தீப் மீது போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
புகையிலை பொருட்கள் விற்பனை
சரவணம்பட்டி: சின்னவேடம்பட்டியில் இருந்து அஞ்சனுார் செல்லும் சாலையில் உள்ள பேக்கரியில் போலீசார் சோதனையிட்டு 4 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். கணபதியில் வசிக்கும் புதுக்கோட்டை எபினேசரை கைது செய்தனர். தப்பி ஓடிய சசியை தேடி வருகின்றனர்.
கஞ்சா விற்பனை
ராமநாதபுரம்: 80 அடி சாலை, சாவித்திரி நகரில், சந்தேகப்படும் படி சுற்றித்திரிந்த சஞ்சய் என்பவரை ரோந்து போலீசார் பிடித்து விசாரித்தனர். அவரிடம், 220 கிராம் கஞ்சா விற்பனைக்கு இருந்தது தெரிந்து பறிமுதல் செய்தனர். சஞ்சயை கைது செய்து விசாரிக்கின்றனர்.
அரிவாளால் வெட்டிய மூவர் மீது வழக்கு
பரமக்குடி திருப்பதிக்கும் சூர்யா, மணிகண்டன்,பிரகாஷ் ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு, கோவைக்கு வந்திருந்த திருப்பதியை சமாதானம் பேச கோவில்மேடு சாஸ்திரி சாலையில் உள்ள தவசி நகர் சந்திப்புக்கு மூவரும் அழைத்துள்ளனர். அங்கு வந்தவரை அரிவாளால் வெட்டி தாக்கியுள்ளனர். திருப்பதி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மூவரையும் தேடி வருகின்றனர்.
போலி நகை அடமானம்
ராமநாதபுரம்: புளியகுளம் பகுதியில் அமர் பைனாஸ் எனும் அடமானக்கடையில், நேற்று மாலை நான்கு பேர் வந்து மோதிரத்தை கொடுத்து பணம் வாங்க முயற்சித்துள்ளனர். கடை உரிமையாளர் நகை போலி என்பது தெரிந்து விசாரித்தார்.
அப்போது, ஒரு பெண் அங்கிருந்து தப்பி ஓடினார். உடன் இருந்த மூன்று பேரை உரிமையாளர் மற்றும் அருகில் இருந்த மக்கள் பிடித்து விசாரித்துள்ளனர். இதில், கோவையில் பல்வேறு கடைகளில் போலி நகையை வைத்து பணம் பெற்றது தெரியவந்தது. ரசீதும் இருந்துள்ளது. ராமநாதபுரம் போலீசார் விசாரணைக்காக மூன்று பேரையும் அழைத்துச்சென்று விசாரிக்கின்றனர்.
