ADDED : நவ 01, 2026 07:47 PM
பெற்றோர் மீது
வழக்குப்பதிவு
காரமடை அருகே உள்ள சிக்காரம்பாளையம் பகுதியை சேர்ந்த தருண், 17, ஸ்ரீ சுதர்சன் 17 ஆகியோர், தனியார் பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள். இவர்கள், இருசக்கர வாகனத்தில் தோலம்பாளையம் சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் மோதி விபத்து ஏற்பட்டது. மருத்துவமனை செல்லும் வழியில் தருண் உயிரிழந்தார். படுகாயமடைந்த ஸ்ரீ சுதர்சன், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
காரமடை போலீசார் விசாரித்து, 18 வயது பூர்த்தியடையாத மைனர் சிறுவர்களுக்கு மோட்டார் பைக் இயக்க அனுமதித்தது மற்றும் விதிமுறை மீறியது உட்பட பிரிவுகளின் கீழ், தருணின் தந்தை பாலகிருஷ்ணன், காயமடைந்த ஸ்ரீ சுதர்சனின் தந்தை சஞ்சய் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
விபத்தில்
ஒருவர் பலி
காரமடை அருகே திம்மம்பாளையம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் குமார் 41, பாலகிருஷ்ணன், 44, ரீகேஷ், 18 ஆகியோர், ஒரே இருசக்கர வாகனத்தில் திம்மம்பாளையத்தில் இருந்து கணுவாய்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். குருந்தமலை பிரிவு அருகே, எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த புளியமரத்தின் மீது மோதியது. காயமடைந்த மூவரும் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ரஞ்சித்குமார் பலியானார். மற்ற இருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காரமடை போலீசார் விசாரிக்கின்றனர்.
