போலி ஆவணங்கள்; மூவர் மீது வழக்குப்பதிவு
சூலூர் அடுத்த பள்ளபாளையத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமம் மற்றும் அறக்கட்டளைக்கு சொத்துக்கள் உள்ளன. போலி ஆவணங்கள் தயார் செய்து, இறந்தவரின் கையெழுத்தை போலியாக போட்டு சொத்துக்களை அபகரிக்க முயற்சி நடந்துள்ளது.
கடந்த, 2013 ஆண்டு ஆசிரமத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட, பேச்சியண்ணன் மற்றும் மகாலிங்கம், முனியப்பன் ஆகிய மூவரும் சேர்ந்து அறக்கட்டளை சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில் ஆசிரமத்தின் முன்னாள் தலைவர் சின்னையனின் கையெழுத்தை போலியாக போட்டு, ஆவணங்கள் தயாரித்து பத்திர பதிவு செய்ய முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆள்மாறாட்டம், போலி ஆவணங்கள் தயாரித்து அறக்கட்டளை சொத்தை அபகரிக்க முயன்ற அவர்கள் மீது, ஆசிரம செயலாளர் குப்புசாமி புகார் அளித்தார். இதுகுறித்து சூலூர் போலீசார், மூவர் மீதும், நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
ஸ்கூட்டர் விபத்தில் ஒருவர் பலி
கணேசபுரம், சந்தியா நகரை சேர்ந்த உதயகுமார் மகன் ராஜ்குமார், 42. பர்னிச்சர் விற்பனையாளர். இவர் நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு ஸ்கூட்டரில், தெலுங்குபாளையம் பிரிவில் இருந்து, தெலுங்குபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவர் மீது மோதாமல் இருக்க ஒதுங்கிய போது நிலை தடுமாறி ஸ்கூட்டர் சாலை ஓரத்தில் விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த ராஜ்குமார் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். அன்னுார் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாகனம் மோதி தொழிலாளி பலி
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பைச் சேர்ந்த கருப்பையா மகன் முத்துமணி, 32. இவர் கணேசபுரத்தில் உள்ள தனியார் மில்லில் பணிபுரிந்து வந்தார்.
முத்துமணி நேற்று மதியம் கணேசபுரத்தில் மோட்டார் பைக்கில் செல்லும்போது எதிரே அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் படுகாயம் அடைந்த முத்துமணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தார். இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடிக்க 'சிசி டிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.