
கஞ்சா சாக்லெட் விற்றவர் கைது
சூலூர் பகுதியில் கஞ்சா சாக்லெட் விற்கப்படுவதாக, பெரியநாயக்கன் பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சூலூர் பஸ் ஸ்டாண்ட் அருகே போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியே வந்த நபரை நிறுத்தி சோதனை நடத்தினர்.
அந்நபர் வைத்திருந்த பையில், 2 கிலோ, 250 கிராம் கஞ்சா சாக்லெட்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில் அந்நபர், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சத்ய பிரதா பிஸ்வால், 34 என்பது தெரிந்தது.
கஞ்சா சாக்லெட்டுகளை கடத்தி வந்து சூலூர் பகுதியில் விற்று வந்ததும் தெரிந்தது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீசார், சத்ய பிரதா பிஸ்வாலை கைது செய்தனர்.
மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு
சூலூர் கலைமகள் நகரை சேர்ந்தவர் புருஷோத்தமன், 55. ஒர்க்சாப் மற்றும் பந்தல் கடை உரிமையாளர். நேற்று முன்தினம், காடாம்பாடி பகுதியில் ஒரு வீட்டில் போட்டிருந்த பந்தலை பிரித்து கொண்டிருந்தார்.
அப்போது, இரும்பு பைப்பை இறக்கும் போது, மேலே சென்ற மின் கம்பியில், இரும்பு பைப் உரசி, மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சூலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். இச்சம்பவம் குறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

