இருசக்கர வாகனம் திருட்டு
துடியலூர் அருகே உள்ள என்.ஜி.ஜி.ஓ., காலனி, துரைராஜ் நகரில் வசிப்பவர் கார்த்திகேயன், 20. இவர் இதே பகுதியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகிறார்.
இரவு தனது இரு சக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்திவிட்டு உறங்கச் சென்றார். காலையில் வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் காணவில்லை. கார்த்திகேயன் அளித்த புகாரில் துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கத்தியை காட்டி மிரட்டிய 4 பேர் கைது
பெரியதடாகத்தை சேர்ந்தவர் சித்ரா, 38. இவருடைய மகன் நிர்மல்,19. இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிரே இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த நவீன் மற்றும் இளங்கோவை தட்டி கேட்டார்.
இதில் ஆத்திரமடைந்த நவீன், 18, அவருடைய நண்பர்கள் சுருளி,22, மணி, 21, டேவிட் ராஜா, 24, ஆகியோர் நிர்மல் வீட்டுக்கு சென்று, அவருடைய தாய் சித்ராவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, வீட்டு கதவு அருகே உள்ள கண்ணாடியை உடைத்தும், 'டிவி' மற்றும் இருசக்கர வாகனத்தை உடைத்து விட்டு சென்றனர்.
இச்சம்பவம் குறித்து தடாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து, நவீன் உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இளம்பெண் போராட்டம்
சுல்தான்பேட்டை அடுத்த பூராண்டாம் பாளையத்தை சேர்ந்தவர் பரணிகுமார்,30. சென்னையில் ஐ.டி., நிறுவன ஊழியர்.
இவர் கோவையில் படித்தபோது, தூத்துக்குடியை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. படிப்பு முடிந்து பணியில் சேர்ந்த பின்னும் இருவரின் காதல் தொடர்ந்துள்ளது.
திருமணம் செய்து கொள்வதாக கூறி, பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன், வேறு பெண்ணை பரணிகுமார் திருமணம் செய்துள்ளார்.
தன்னை ஏமாற்றியதால் அதிர்ச்சி அடைந்த தூத்துக்குடி பெண், காதலனிடம் நியாயம் கேட்டுள்ளார். அதற்குப்பின் காதலனை தொடர்பு கொள்ள முடியாததால் நேற்று முன்தினம் இரவு, பூராண்டாம் பாளையம் வந்து காதலன் வீட்டு முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
சுல்தான்பேட்டை போலீசாரிடமும் புகார் அளித்தார். இரு தரப்பினரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.