காப்பர் கம்பி திருடிய இருவர் கைது
கோவை அருகே தடாகம் வட்டாரத்தில் உள்ள செங்கல் சூளைகள் மூடப்பட்டதால், அங்குள்ள இயந்திரங்கள், கிணறுகளில் உள்ள காப்பர் கம்பிகள், மின்வாரியத்துக்கு சொந்தமான டிரான்ஸ்பார்மரில் உள்ள காப்பர் கம்பிகளும் அடிக்கடி திருட்டு போயின.
மின் ஊழியர் கஜேந்திரன் பெரியதடாகம் அருகே உள்ள ட்ரான்ஸ்பார்மர் ஒன்றை பார்வையிட சென்றார். அப்போது, அங்கிருந்த இரண்டு பேர் டிரான்ஸ்பார்மர் கம்பிகளை திருடியது தெரிய வந்தது. அங்குள்ள பொதுமக்களின் உதவியுடன் இருவரும், தடாகம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள், தடாகம் குட்டைவழி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ்,40, கருப்பராயன் கோவில் வீதியைச் சேர்ந்த பிரவீன் குமார்,35, என தெரியவந்தது.
இவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தடாகம் பகுதியில் மூடப்பட்ட செங்கல் சூளைகள் மற்றும் வெவ்வேறு இடங்களில் உள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து காப்பர் கம்பிகளை திருடியது தெரியவந்தது.
இவர்களிடம் இருந்து, 604 கிலோ எடையுள்ள காப்பர் கம்பிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சுவற்றில் கார் மோதி ஒருவர் பலி
சின்னத்தடாகம் அருகே உள்ள திருவள்ளுவர் நகரில் வசித்தவர் செல்வராஜ், 55; கால் டாக்ஸி டிரைவர். தடாகம், பன்னிமடை ரோட்டில் காரில் வேகமாக வந்து கொண்டிருந்தபோது, நிலை தடுமாறி ரோட்டோரம் இருந்த சுவற்றில் கார் மோதியது. இதில், செல்வராஜுக்கு தலை, கால், இடுப்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
சாய்பாபா காலனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். தடாகம் போலீசார் விசாரிக்கின்றனர்.