மின்சாரம் தாக்கி பால் வியாபாரி பலி
ஏ.எஸ். குளம், கருப்பராயன் கோவில் வீதியில் வசித்தவர் வடிவேல் குமார், 46; பால் வியாபாரி. நேற்று காலை, 3:00 மணிக்கு பால் வியாபாரம் மேற்கொள்ள, தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றார்.
காலை, 6:00 மணிக்கு தொட்டிபாளையத்திலிருந்து காரமடை ரோட்டில் அண்ணா நகர், ஊட்டிக்காரர் தோட்டம் அருகே தெற்கிலிருந்து வடக்கு நோக்கி சென்றபோது, அங்கிருந்த மின்சார கம்பத்திலிருந்து அறுந்த மின்சார கம்பி ரோட்டில் தொங்கிக் கொண்டிருந்தது.
கம்பி மீது வடிவேல் குமார் எதிர்பாராத விதமாக மோதியதில், மின்சாரம் தாக்கி வடிவேல் குமார் அதே இடத்தில் உயிரிழந்தார். இதே விபத்தில், அவர் அருகிலேயே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வையம்பாளையம் டீ மாஸ்டர் மயில்சாமி, 52, காயம் அடைந்தார். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா விற்ற ஒடிசா வாலிபர் கைது
சூலூர் அடுத்த தென்னம்பாளையம் - அன்னூர் ரோட்டில், டாஸ்மாக் கடை அருகே கஞ்சா விற்கப்படுவதாக சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற எஸ்.ஐ., முருகநாதன், ஏட்டு செந்தில் முருகன் ஆகியோர் சந்தேகத்துக்கு இடமான வகையில் சென்ற நபரை பிடித்து விசாரித்தனர். கைப்பையில், 1 கிலோ, 300 கிராம் கஞ்சா இருந்தது. அந்நபர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பத்ம லோஜன் டக்குவார், 37 என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 பவுன் நகை திருட்டு
பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிரஸ்காலனி, வள்ளலார் நகரில் வசிப்பவர் மோகன்ராஜ், 29. இவர் தனது குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டு, வீடு திரும்பினார். வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு, பீரோ திறந்து கிடந்தது. பீரோவில் இருந்த பிரேஸ்லெட், மோதிரம் என, 14 பவுன் நகை திருட்டு போய் இருந்தது. இது குறித்து, பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.