பெட்ரோல் பங்கில் திருட்டு
உப்பிலிபாளையம் பகுதியில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. பங்கில் ராமநாதபுரத்தை சேர்ந்த ஜெயசங்கர், 53 என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர், பெட்ரோல் பங்க் கலெக்சன் பணத்தை, தனது அறையில் வைத்துள்ளார். பின்னர், அந்த பணத்தை எடுக்க சென்ற போது, பணம் மாயமாகியிருந்தது.
அங்கிருந்த சி.சி.டி.வி., காட்சிகளை பார்த்தபோது, பங்கில் வேலை பார்த்து வந்த, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் பணத்தை திருடியிருப்பது தெரியவந்தது. ரேஸ்கோர்ஸ் போலீசில் அளித்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கார் மோதி முதியவர் பலி
வெள்ளலுாரை சேர்ந்தவர் அசோக் குமார், 65; தனது வீட்டின் அருகில் உள்ள கடைக்கு செல்வதற்காக, எல் அண்ட் டி பைபாஸ் சாலையில், கள்ளபாளையம் பிரிவு அருகில் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த கார், முதியவர் மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அசோக் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
1170 மதுபாட்டில்கள் பறிமுதல்
மே தினத்தில் சட்டவிரோதமாக, மது விற்பனையில் ஈடுபடுவதை தடுக்க மாநகரில் உள்ள சட்டம் ஒழுங்கு போலீசார் மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர். அப்போது, மாநகரில் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுக்கடைகளில் சட்ட விரோதமாக, மது விற்பனை நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, மாநகர் முழுவதும் இருந்து 1,170 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில், சிங்காநல்லுார் - வெள்ளலுார் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் இருந்து 532 பாட்டிகள் மற்றும் சுந்தராபுரம், காந்திஜி ரோடு பகுதியில் இருந்து 300 பாட்டில்கள் பறிமுதல் செய்து, சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட, சிவகங்கையை சேர்ந்த விஜய், 25, மதிபாலன், 23 ஆகியோரை போலீசார் சிறையில் அடைத்தனர்.