தங்க நகைக்கு பதில் பித்தளை நகை
அடமானம் வைத்த தங்க வளையல்களுக்கு பதிலாக, பித்தளை நகை வழங்கியதாக, வங்கி மீது பெண் அளித்த புகார் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சூலுார் அடுத்த ரங்கநாத புரதத்தை சேர்ந்தவர் விஜி ஜார்ஜ்,40. இவர் சூலுாரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தங்க வளையல்களை அடமானம் வைத்ததாக கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன் நகைகளை மீட்க வங்கிக்கு சென்றார். பணத்தை செலுத்திய பின், வங்கியில் வழங்கிய நகையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மொத்தம் ஐந்து வளையல்களில் நான்கு வளையல்கள் பித்தளை என தெரிந்தது. இதுகுறித்து வங்கி அதிகாரிகள், ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தார்.
பல மணி நேரம் வாக்குவாதத்துக்கு பின், அவசர உதவி எண்ணான, 100 க்கு போன் செய்து புகார் அளித்தார். அங்கு சென்ற போலீசார், இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தினர். இதையடுத்து, விஜி ஜார்ஜிடம் போலீசார் புகாரை பெற்று, தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.
சாலை விபத்தில் இருவர் பலி
கோவை மாவட்டம் காரமடை அருகே தேக்கம்பட்டி ராஜீவ் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரதாப், 22. அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் ராகவன், 17. நண்பர்களான இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் பைக்கில் சென்ற போது, தேவனாபுரம் அருகே வளைவில் திரும்பும் போது கணுவாய்பாளையம் பிரிவிலிருந்து அதிவேகமாக வந்த கார் மோதி, இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய கார் அங்கிருந்து தப்பிச் சென்றது.
இந்த விபத்தில் நேற்று முன் தினம் பிரதாப் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். விபத்தில் படுகாயம் அடைந்த ராகவனை, அக்கம் பக்கத்தினர், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின், கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ராகவன் பலியானார். இச்சம்பவம் குறித்து காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
--- மின்சாரம் தாக்கி விவசாயி, கன்றுக்குட்டி பலி
சூலூர் அடுத்த நடுப்பாளையத்தை சேர்ந்தவர் மணி, 67. விவசாயி. இவர் தனது மூன்று மாடுகள், இரு கன்றுக்குட்டிகளை தோட்டத்தில் மேய்க்க சென்றார். மாடுகளுக்கு தண்ணீர் வைக்க சென்ற போது, ஒரு கன்றுக்குட்டி, அறுந்து கிடந்த வயரை கடித்ததால் கீழே விழுந்தது. அதைக்கண்ட மணி, வேகமாக சென்று கன்றுக்குட்டியை தூக்கியபோது, அவரையும் மின்சாரம் தாக்கியது. அதனால், அவர் மயங்கினார்.
தகவல் அறிந்து குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தனர். 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. பரிசோதனையில் மணி இறந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மணியின் மகன் கார்த்திகேயன் சூலூர் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.