ADDED : ஜூன் 22, 2025 11:26 PM
ஆண் சடலம் மீட்பு
மேட்டுப்பாளையம் ஓடந்துறை அருகே வினோபாஜி நகரில் தனியாருக்கு சொந்தமான 50 அடி ஆழ கிணறு பயன்பாட்டில் இல்லாமல் இருந்து வருகிறது. இந்த கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று பார்த்ததில், சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று அழகிய நிலையில் இருப்பதை கண்டறிந்தனர். தொடர்ந்து சடலத்தை மீட்ட போலீசார், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி
கோவை மாவட்டம் காரமடை அருகே குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் நாகமாணிக்கம், 30. ஆட்டோ டிரைவர். இவர் ஆட்டோவில் அப்பகுதியில் இருந்து வேறு பகுதிக்கு சென்ற போது, சாலை வளைவில் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ கவிழ்ந்தது. இதில் நாகமாணிக்கம் மீது ஆட்டோ விழுந்ததில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து, காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
----