தொழிலாளி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டையை சேர்ந்தவர் மாசிலாமணி, 28. இவர் சூலூர் அடுத்த தென்னம்பாளையத்தில் தங்கி, சுண்ட மேட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் மெஷின் ஆப்பரேட்டராக வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, பணி முடிந்து பைக்கில் வீட்டுக்கு சென்றார். சோளக்காட்டுப்பாளையம் அருகே சென்றபோது, திடீரென நாய் குறுக்கே வந்தது.
அதனால், நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மனைவியை தாக்கிய கணவர் கைது
தென்காசி அடுத்த ஆலங்குளத்தை சேர்ந்தவர் முருகலட்சுமி, 41. இவரது கணவர் குட்டி, 52. லாரி டிரைவர். கணவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்ததால், இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
கடந்த மூன்று மாதத்துக்கு முன், கணவனை பிரிந்து வந்த முருகலட்சுமி, சூலூர் அடுத்த இடையர் பாளையத்தில் தங்கி, பாப்பம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று வந்தார்.
நேற்று முன்தினம் பாப்பம்பட்டி வந்த குட்டி ,வேலைக்கு சென்று கொண்டிருந்த முருகலட்சுமியுடன் தகராறு செய்து, இரும்பு ராடால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பினார். அக்கம்பக்கத்தினர் அப்பெண்ணை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அப்பெண் கொடுத்த புகாரின் பேரில், குட்டியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.