/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழை பொழிவு குறைந்ததால் அணையின் நீர்மட்டம் சரிவு
/
மழை பொழிவு குறைந்ததால் அணையின் நீர்மட்டம் சரிவு
ADDED : ஜூலை 10, 2025 08:17 PM

வால்பாறை; வால்பாறையில், மழை பொழிவு குறைந்ததால், சோலையாறு அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
வால்பாறையில், கடந்த மே மாதம் துவங்கிய தென்மேற்கு பருவமழை, ஜூன் மாத இறுதியில் தீவிரமாக பெய்தது. இதனால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை கடந்த மாதம், 27ம் தேதி நிரம்பியது.
இதனை தொடர்ந்து, சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேலும், மின் உற்பத்திக்கு பின், தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இதேபோல், காடம்பாறை அணை நிரம்பியதால் மேல்ஆழியாறு அணை வழியாக, ஆழியாறு அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இந்நிலையில், வால்பாறையில் கடந்த நான்கு நாட்களாக மழை பொழிவு படிப்படியாக குறைந்து வருவதால், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து நீர்வரத்து குறைந்து வருகிறது.
இதனால், சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 159.78 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,280 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 1,509 கனஅடி தண்ணீர் வீதம் பரம்பிக்குளம் அணைக்கு திறந்து விடப்படுகிறது.