/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'டிரோன் சர்வேயை' நிறுத்த தர்ணா! கவுன்சிலர்கள் போராட்டம்
/
'டிரோன் சர்வேயை' நிறுத்த தர்ணா! கவுன்சிலர்கள் போராட்டம்
'டிரோன் சர்வேயை' நிறுத்த தர்ணா! கவுன்சிலர்கள் போராட்டம்
'டிரோன் சர்வேயை' நிறுத்த தர்ணா! கவுன்சிலர்கள் போராட்டம்
ADDED : பிப் 07, 2025 10:22 PM

கோவை; கோவை மாநகராட்சியில் நடைமுறையில் இருந்த 'டிரோன் சர்வே' முறையை, நிரந்தரமாக ரத்து செய்யக்கோரி, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாநகராட்சியில் மாமன்ற கூட்டம் நேற்று நடந்தது. அ.தி.மு.க., கவுன்சில் குழு தலைவர் பிரபாகரன் மற்றும் கவுன்சிலர்கள் ஷர்மிளா, ரமேஷ் ஆகியோர், விக்டோரியா ஹால் முன் நின்று, 'ரத்து செய்; ரத்து செய், டிரோன் சர்வே பணியை ரத்து செய்.
மக்களிடம் வசூலித்த வரிப்பணத்தை திருப்பிக் கொடு. டிரோன் சர்வே பணியை நிரந்தரமாக நிறுத்த வேண்டும்' என கோஷம் எழுப்பினர்.
இதன் பின், அ.தி.மு.க., கவுன்சில் குழு தலைவர் பிரபாகரன் நிருபர்களிடம் கூறியதாவது:
'டிரோன் சர்வே' என்கிற திட்டத்தில், ஒவ்வொரு வீடாக அளக்கின்றனர். இரண்டு மாதங்களாக வீடு வீடாகச் சென்று, வசிப்போரை தொல்லை செய்து, அளவீடு செய்கின்றனர். வீட்டு வரி, காலியிட வரி, தண்ணீர் வரி, குப்பை வரி விதித்துள்ளனர்.
ஆண்டுக்கு ஆறு சதவீதம் வரி உயர்வு செய்யப்படுகிறது. கூடுதலாக, சின்னதாக ஒரு டாய்லெட் கட்டினாலும் வரி போட்டிருக்கின்றனர். 4,000 ரூபாய் இருந்த சொத்து வரியை, 38 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியுள்ளனர்.
ஒரு ஓட்டு வீட்டுக்கு ஒரு லட்சத்து, 60 ஆயிரம் ரூபாய் நிர்ணயித்தனர். இவ்வாறு பல வகைகளில் குளறுபடி நடந்திருக்கிறது.
மக்களை பற்றி கவலைப்படாமல், தி.மு.க., மேயர் இருக்கிறார்.
பைனான்ஸ் கம்பெனியில் மட்டுமே, தவணையை தாமதமாக செலுத்தினால் வட்டி கேட்பார்கள். அதேபோல், சொத்து வரிக்கு வட்டி போடுகிறார்கள்.
நகை கடைக்காரருக்கும், பூக்கடைக்காரருக்கும் ஒரே தொழில் வரி. அநியாயமாக இருக்கிறது.
இங்கு நடப்பதை, முதல்வர் கவனத்துக்கு உளவுத்துறையினர் கொண்டு செல்கிறார்களா என தெரியவில்லை.
தி.மு.க., ஆட்சியின் சாதனை என்று சொன்னால், வ.உ.சி., பூங்காவை இழுத்து மூடியதை தான் சொல்ல வேண்டும்.
வெள்ளலுார் பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணியை, முடக்கி வைத்துள்ளார்கள். 300 கோடி ரூபாய்க்கு ரோடு போட்டதாக கூறுகிறார்கள். ஒரு ரோடாவது உருப்படியாக இருக்கிறதா; குனியமுத்துாரில் ரோடு போடாமல் நிறுத்தி வைத்திருக்கின்றனர். மக்கள் அவதிப்படுகின்றனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.