ADDED : செப் 11, 2026 06:51 PM
மேட்டுப்பாளையம்: வனப்பகுதிகளில் வறட்சி நிலவுவதால், செடிகள், புற்கள் ஆகியவை காய்ந்துள்ளன. இதனால் மரங்களில் பழுத்து கீழே விழும் இலைகளை மான்கள் உண்ணுகின்றன.
மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய வனப்பகுதிகள், 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஹெக்டர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன. கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக, மேட்டுப்பாளையம் பகுதியில் கன மழை பெய்யவில்லை. அதனால் வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் தண்ணீர் இல்லாமல் வற்றியுள்ளன. மேலும் வனப் பகுதியில் உள்ள நிலங்களில் போதுமான ஈரப்பதம் இல்லாததால், செடிகள், புற்கள் ஆகியவை காய்ந்து வருகின்றன. அதனால் மான், யானை, காட்டு மாடுகள் ஆகிய வனவிலங்குகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
வனப்பகுதியில் புற்களும், செடிகளும் காய்ந்துள்ளதால், வனப்பகுதியில் உள்ள மரங்களில், பழுத்து கீழே விழும் இலைகளை, மான்கள் சாப்பிட்டு வருகின்றன. இதே நிலை நீடித்தால் வனவிலங்குகள், விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை தேடி வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
