கால்நடைகள் பல், எலும்புக்கு உதவும் தாது உப்புக்கு டிமாண்ட்
கால்நடைகள் பல், எலும்புக்கு உதவும் தாது உப்புக்கு டிமாண்ட்
UPDATED : நவ 01, 2026 03:56 PM
ADDED : நவ 01, 2026 03:54 PM
கோவை: கால்நடைகளுக்கு அரசு சார்பில் வழங்கும் இலவச தாது உப்பு கலவை, கடந்த ஆறு மாதங்களாக வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது.
கால்நடைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, தீவனத்துடன் சேர்த்து மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து உள்ளிட்ட தாது கலந்த உப்பு கால்நடைத்துறை சார்பில் வழங்கப்படுகிறது. மாடுகளின் எலும்பு, பல் மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.
மாடு சினை பிடிக்கும் கால இடைவெளியை குறைக்கவும் உதவுகிறது. அதனால், சினை மாடுகள், கிடாரி கன்று, ஆடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு தாது உப்பு வழங்கப்படுகிறது.
தாது உப்பு பற்றாக்குறையை சமாளிக்க, மாவட்ட வாரியாக கால்நடை பராமரிப்பு துறை மூலமாக இலவச தாது உப்பு வழங்கப்படுகிறது.
மாவட்டத்தின் பல பகுதிகளில் இலவச தாது உப்பு வழங்கப்படவில்லை என விவசாயிகள் குமுறுகின்றனர். மாடுகளின் வளர்ச்சியும் பால் உற்பத்தியும் குறையும் என விவசாயிகள் கூறுகின்றனர்.
கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகளிடம் நமது நிருபர் கேட்டபோது, ‘வட்டார வாரியாக தாதுஉப்பு தேவை குறித்த பட்டியலை ஆவினுக்கு அனுப்பியுள்ளோம். தீபாவளிக்கு முன் வழங்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம்’ என்றனர்.
